தமிழ்நாட்டில் இன்று (ஜூன் 17) 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக
இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய 10 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை வேலூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை ஆகிய 16 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூன் 19 ஆம் தேதி திருவள்ளூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் வானிலை நிலவரம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்ஷியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்ஷியஸ் ஒட்டியே இருக்கக்கூடும்.
மீனவர்கள் இன்று முதல் ஜூன் 21 ஆம் தேதி வரை வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அரபிக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மோனிஷா
தலைவர்களை படிக்க சொன்ன விஜய்: பாராட்டிய விசிக
எஸ்.ஜி.சூர்யா கைது… பழிவாங்கும் நடவடிக்கை- நாராயணன் திருப்பதி