தமிழகத்தில் நாளை (டிசம்பர் 25) 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (டிசம்பர் 24) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 8.30 மணியளவில் நாகப்பட்டினத்திலிருந்து சுமார் 470 கி.மீ கிழக்கே நிலை கொண்டுள்ளது.
இது மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து 25 ஆம் தேதி காலையில் இலங்கை கடற்கரை அருகில் நிலவக் கூடும். அதன் பிறகு மேலும் மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து 26 ஆம் தேதி காலையில் இலங்கை வழியாகக் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.
இதன் காரணமாக நாளை தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் வானிலை நிலவரம்
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்ஷியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்ஷியஸ் அளவில் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
இன்று மற்றும் நாளை தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
டிசம்பர் 26 ஆம் தேதி தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
டிசம்பர் 27 ஆம் தேதி குமரிக்கடல் பகுதிகள், கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
டிசம்பர் 28 ஆம் தேதி தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்கண்ட நாட்களில் மீனவர்கள் குறிப்பிடப்பட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மோனிஷா
வாரிசு இசை வெளியீடு: டிக்கெட் சர்ச்சை…தொலைக்காட்சியில் எப்பொழுது பார்க்கலாம்?
தமிழிசை மூவர் மண்டபம்: மின்னம்பலம் கட்டுரை- முதல்வர் எடுத்த ஆக்ஷன்!