கனமழை எதிரொலியாக 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிசம்பர் 2) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலவி வந்த “ஃபெஞ்சல்” புயல் புதுச்சேரி – மரக்காணம் இடையே இன்று கரையை கடந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது.
அது தற்போது கடலூருக்கு வடக்கே 30 கிலோ மீட்டர் தொலைவிலும், விழுப்புரத்திற்கு கிழக்கே 40 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தெற்கு- தென்மேற்கே 120 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. அது மேற்கு நோக்கி மிக மெதுவாக நகர்ந்து, 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு முதல் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. பல இடங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. வீடுகளில் மழைநீர் புகுந்த நிலையில், ப்ரிஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் சேதமடைந்துள்ளன.
பள்ளி, கல்லூரிகள் விடுமுறை!
இந்த நிலையில் வெள்ளத்தால் தத்தளித்து வரும் புதுச்சேரியில் நாளை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல தமிழகத்தில் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம், கடலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை பெய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!
வேலூர், திருப்பத்தூர், சேலம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுகள் ஒத்தி வைப்பு!
வேலூரில் கனமழை தொடர்வதால் நாளை நடைபெறவிருந்த திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலை பல்கலை. இணைப்புக் கல்லூரிகளில் நாளை நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கு மாற்றுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கொங்கு ’உணவு’ பெஷ்டிவல் இல்ல… ’திருட்டு’ பெஷ்டிவல் – கொந்தளிக்கும் கோவை மக்கள்!
புயல் பாதிப்பில் கடலூர், விழுப்புரம்… மீட்பு பணிகளை பட்டியலிட்ட ஸ்டாலின்