சென்னை புறநகர் பகுதிகள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று (ஆகஸ்ட் 27) இரவு கன மழை கொட்டித் தீர்த்தது.
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று (ஆகஸ்ட் 28), திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ரானிப்பேட்டை, நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும்,
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று இரவு (ஆகஸ்ட் 27) சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், குரோம்பேட்டை, சேலையூர், பல்லாவரம், வேளச்சேரி மற்றும் மாடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்தது.
இதனால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே செல்ல முடியாமல் கடும் அவதி அடைந்தனர். தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
கனமழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முடங்கியது. பூந்தமல்லி பகுதியில் ஒரு மணி நேரம் சாரல் மழை பெய்தது.
மதுரையின் பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் கன மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கியது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால் பராமரிப்பின்றி உள்ளதால், மழைநீர் தேங்குவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.
இதனைப் போல விருதுநகர், திண்டுக்கல், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், தூத்துக்குடி, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது.
செல்வம்
22 மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாள் கனமழை!