15 மாவட்டங்களில் கனமழை: மீனவர்களுக்கு எச்சரிக்கை!
மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்,
என சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (அக்டோபர் 4) தெரிவித்துள்ளது.
மேலும், இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது:
மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, இன்று (அக்டோபர் 4 ) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும்,
நாளை முதம் 7 ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை உட்பட 15 மாவட்டங்களில் அக்டோபர் 8 ஆம் தேதி இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் எனவும் அது தெரிவித்துள்ளது.
வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தெற்கு இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால்,
வரும் 8 ஆம் தேதி வரை மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
அமித்ஷா வருகை: ஜம்மு காஷ்மீர் டிஜிபியை கொன்ற பயங்கரவாத அமைப்பு!
கோவை தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் வாபஸ்