சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரியான வீராணம் அதிக அளவிலான உலோகங்களால் மாசடைந்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
சென்னையில் இருந்து 235 கிமீ தொலையில் இருந்தாலும் வீராணம் ஏரி லட்சக்கணக்கான சென்னை வாசிகளின் குடிநீர் ஆதாரமாக இருக்கிறது.
நாளொன்றுக்கு 170 மில்லியன் லிட்டர் தண்ணீரை வழங்குகிறது. கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த ஏரி சுற்றுவட்டார பகுதி விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காத்து வருகிறது.
இந்த ஏரியில் சமீபத்தில் தமிழ்நாடு, சவூதி அரேபியா மற்றும் அமெரிக்க நிறுவனங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு ஆய்வு நடத்தியது.
இக்குழு ஏரியில் உள்ள மீன்கள் மற்றும் பறவைகளில் உலோகங்கள் அதிக அளவில் இருந்ததை கண்டறிந்துள்ளது. திலாப்பியா, ரோகு என பொதுவாக உட்கொள்ளப்படும் மீன்களின் திசுக்களில் அதிகளவிலான உலோகங்கள் இருந்துள்ளது.
ஆராய்ச்சியின் படி, ஈயம், குரோமியம், நிக்கல், துத்தநாகம், ஆர்சனிக், தாமிரம் மற்றும் பாதரசம் போன்ற உலோகங்கள், மீன்கள் மற்றும் பறவைகளின் திசு, கல்லீரல், சிறுநீரகம், நீர்ப்பறவைகளின் இறகுகள் மற்றும் அவை இரையாக எடுத்துக்கொள்ளும் நண்டு உள்ளிட்ட ஏரியில் வாழும் உயிரினங்களில் கண்டறியப்பட்டுள்ளது.
ஆராய்ச்சியாளர்கள் ஏரியை சுற்றி இறந்து கிடந்த ஹெரான் எனப்படும் ஒருவகை கொக்குகள் மற்றும் இரவு நேர பறவைகள், மீன்கள், இரை உயிரினங்கள் ஆகியவற்றை சேகரித்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.
உடலில் அதிகபடியான ஈயம் இருக்கும்பட்சத்தில் அது பறவையின் செல்களுக்கு அழுத்தம் கொடுப்பதோடு, நினைவாற்றலை இழக்கச்செய்யும்.
அதிக அளவிலான குரோமியம் டிஎன்ஏ மற்றும் புரத சத்தை பாதிக்கும், அதுபோன்று நிக்கல் இருப்பதால் உடலில் கட்டி ஏற்படுவதோடு, செல்லுலார் தொடர்பை இழக்கச் செய்யும்.
துத்தநாகம் மற்றும் ஆர்சனிக் அதிகளவு இருப்பது உடல் ரீதியான பிரச்சினையை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்த ஏரியில் அதிகளவு உலோகங்கள் இருப்பதற்கு முதன்மை காரணம் காவிரி நீர் என்று ஆய்வறிக்கை சொல்கிறது.
காவிரி ஆற்றங்கரையில் தோல் தொழிற்சாலைகள், பேட்டரி தொழிற்சாலைகள், மதுபான ஆலைகள் உட்பட பல சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான நிறுவனங்கள் உள்ளன.
இந்த தொழிற்சாலைகள் காவிரி படுகையில் அதன் கழிவுகளை வெளியேற்றுகின்றன.
அதோடு, காவிரி படுகையில் அமைந்திருக்கும் பஞ்சாயத்து, பேரூராட்சி, நகராட்சிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.
காவிரி ஆற்றங்கரையோரம் உள்ள விவசாயிகள் பயிர்களுக்கு ஏராளமான பூச்சிக்கொல்லிகள், உரங்கள் மற்றும் ரசாயனங்களைப் பயன்படுத்துகின்றனர்.
இதுவும் நீர்மாசுபாட்டுக்கு முக்கிய காரணமாக அமைகிறது என ஆய்வு கூறுகிறது.
இந்த உலோக மாசுபாட்டால் நீர் நிலை பாதிக்கப்படுவதோடு, அவற்றை நம்பி வாழும் மீன்கள், பறவைகள், மனிதர்களுக்கு உடல் நிலை பாதிக்கப்படும். இந்த அபாயத்தை தடுக்க நீர்வாழ் சூழலைப் பாதுகாக்க போதுமான விதிகள் செயல்படுத்தப்பட வேண்டும். நீர்நிலைகளின் தரம் மற்றும் மேலாண்மையை மேம்படுத்த ஒரு விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று இந்த ஆய்வறிக்கை எச்சரிக்கிறது,
பிரியா
அதிதி ராவுடன் ‘டம் டம்’ ஆடும் சித்தார்த்… விரைவில் டும் டும்?
சென்னை: வணிக வளாகமாக மாறும் பஸ் டிப்போக்கள்!