’வெயில் அதிகரிக்கும் மக்களே’ : வானிலை மையம் எச்சரிக்கை!

Published On:

| By christopher

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து இன்று (பிப்ரவரி 18) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, ”கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவியது. மழை எங்கும் பதிவாகவில்லை.

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் 37.4 டிகிரி செல்சியஸ் (99.32 F) வெப்பம் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக நாமக்கல்லில் 16 டிகிரி செல்சியஸ் (60.8 F) வெப்பம் பதிவாகியுள்ளது.

வறண்ட வானிலையே நிலவும்!

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

நாளை மறுநாள் வரும் 14ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை!

தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

மீண்டும் இரட்டை சதம் : பேட்டால் மாயாஜாலம் காட்டிய ஜெய்ஸ்வால்

’அந்த நான்கு பேரைப் பற்றி பேசாதே’ : கட்சியினருக்கு சீமான் கட்டளை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel