தமிழகத்தில் வெப்பம் இயல்பைவிட அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (மே 16) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மேற்கு திசை காற்று காரணமாக,
இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை (மே 17) முதல் 20 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை
இன்று முதல் மே 18 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 – 4 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னையில் வானிலை நிலவரம்
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்ஷியள் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்ஷியஸ் ஒட்டியே இருக்கும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
இன்றும் நாளையும் தெற்கு அரபிக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மோனிஷா
தி கேரளா ஸ்டோரி… தமிழ்நாட்டில் தடையா?: உச்சநீதிமன்றத்தில் அரசு பதில்!
’எடப்பாடியுடன் சேர தயார்’: திருமாவளவன்