தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.
இதன்காரணமாக, அடுத்த ஐந்து நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 – 5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்ககூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வட தமிழக உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று தெரிவித்துள்ளது. குறிப்பாக நாட்டிலேயே அதிகபட்ச வெப்பநிலை பதிவான மாவட்டங்களில் சேலம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 9 இடங்களில் 40-42° செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை சேலத்தில் 42.3° செல்சியஸ், ஈரோட்டில் 42.0° செல்சியஸ், திருப்பத்தூரில் 41.6° செல்சியஸ், கரூர் பரமத்தி & வேலூரில் 41.5° செல்சியஸ், தர்மபுரி & மதுரையில் (நகரம்) 41.0° செல்சியஸ், நாமக்கல்லில் 40.5° செல்சியஸ் மற்றும் திருச்சியில் 40.1° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
தமிழக உள் மாவட்டங்களில் 38° – 39° செல்சியஸ் பதிவாகியுள்ளது. தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34° – 38° செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 21° -28° செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 38.3° செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 36.1° செல்சியஸ்
பதிவாகியுள்ளது.
வெப்ப அலை காரணமாக, கோவை மாவட்டத்தில் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்று அம்மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் தனது ஏப்ரல் 23 நாளிட்ட அறிவிக்கையில், தமிழ்நாட்டின் வட உள் மாவட்டமான கோயம்புத்தூர் மாவட்டத்தில் வரும் நாட்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும், அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்குமாறும், குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்த்திடுமாறும், வெயிலின் தாக்கத்தால் உடல்நலக் குறைவு ஏற்படும் நிலையில், உடனடியாக மருத்துவரை அணுகுமாறும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நயினார் நாகேந்திரன் மீது ED விசாரணை கோரிய மனு : உயர் நீதிமன்றம் உத்தரவு!
கேரளா, கர்நாடகா… தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது!