என்ன செய்தாலும் உடல் எடையைக் குறைப்பது பெரும்பாடாக உள்ளது என்று புலம்புவோருக்கு மத்தியில், எவ்வளவுதான் சாப்பிட்டாலும் உடம்பு ஏறவில்லையே என்று ஏங்குபவர்களும் உண்டு.
இயற்கையாக, ஆரோக்கியமான முறையில் உடலின் எடையை அதிகரிப்பது எப்படி… அதற்கு என்ன செய்ய வேண்டும்?
உடலின் எடை வரையறை என்பது ஒவ்வொருவருக்கும் அவரின் உடலமைப்பைப் பொறுத்து மாறுபடும். 180 செ.மீ உயரம் இருப்பவர்களும், 160 செ.மீ உயரம் இருப்பவர்களும் ஒரே எடையில் இருக்க வேண்டிய தேவையில்லை. ஒவ்வொருவரின் உயரத்துக்கேற்ற எடை இருந்தாலே போதுமானது.
சிலருக்கு மரபு காரணமாக உடல்வாகு சற்று ஒல்லியாகவே இருக்கும். வளர்சிதை மாற்றத்தின்படி, அவர்கள் உட்கொள்ளுவதைக் காட்டிலும் அதிகமாக எனர்ஜி வெளியேறிக் கொண்டிருக்கும்.
எனவே, என்ன சாப்பிட்டாலும் வெயிட் ஏறாது என்பதால் அவர்கள் உடலின் எடையை அதிகரிக்க சற்று அதிக முயற்சி எடுக்க வேண்டும்.
சிலருக்கு இயல்பாகவே உடலில் கொழுப்பு சேர்வது போன்ற உடலமைப்பு இருக்கும், குறைவாகச் சாப்பிட்டாலும் உடல் மெலியாது. எனவே, முதலில் தங்களுடைய உடலின் அமைப்பை சம்பந்தப்பட்டவர் புரிந்துகொள்ள வேண்டும்.
இதைத் தவிர்த்து ஏற்கெனவே உடலின் எடை சரியான முறையில் இருந்து குறைந்து இருந்தாலோ, நாள்பட்ட நோயால் உடல் எடை குறைந்திருந்தாலோ, அதைச் சரியான முறையை மேற்கொண்டு அதிகரிக்க முடியும்.
சரி… ஆரோக்கியமான முறையில் உடல் எடை அதிகரிக்க என்னவெல்லாம் செய்யலாம்?
சரிவிகித உணவு சாப்பிட வேண்டும். நாம் சாப்பிடும் உணவு புரதம், மாவுச்சத்து, தாது உப்புகள், வைட்டமின், நார்ச்சத்து என அனைத்தும் நிறைந்ததாக இருக்க வேண்டும்.
புரதச்சத்து உள்ள உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வது நல்ல பயனளிக்கும். புரதத்தைப் பொறுத்தவரை விலங்கில் இருந்து கிடைப்பது, தாவரத்தில் இருந்து கிடைப்பது என இரு வகை உள்ளன.
விலங்குகளிடம் இருந்து பெறக்கூடிய புரதத்தில் நம் உடலுக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளன. விலங்குப் புரதம் முட்டை, இறைச்சி, மீன், பால் பொருள்கள் போன்றவற்றில் உள்ளது.
தாவர புரதத்தைப் பொறுத்தவரை தானிய வகைகள், பருப்பு வகைகள், கடலை, பனீர் போன்றவற்றில் மிகுந்துள்ளது.
மாவுச்சத்தைப் பொறுத்தவரை தானியங்கள் மற்றும் பால் எடுத்துக்கொள்வது உடல் எடை அதிகரிக்க உதவும். இவற்றுடன் இனிப்புக்காக எதையேனும் சேர்த்துக்கொள்வதைத் தவிர்க்கவும்.
எடை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் பேக்கரி பொருள்கள், எண்ணெயில் பொரித்த உணவுகளைச் சாப்பிட்டால் தொப்பைதான் போடுமே தவிர உடல் எடை அதிகரிக்காது.
தசை அதிகரிப்புக்கான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
சரியான நேரத்தில் சாப்பிடுவது, சரியான நேரத்தில் உறங்குவது இவையெல்லாம் உடல் எடையை அதிகரிக்க உதவும்.