‘டெம்ப் பக்கிங்’ என்று சொல்லப்படுகிற மைக்ரோவேவ் போன்ற குறிப்பிட்ட வெப்பநிலையில் வைத்துச் செய்யப்படும் உணவுகள் தற்போது அதிகமாக விற்கப்படுகின்றன.
இவற்றில் டிரான்ஸ்ஃபேட் அதிகமாக இருக்கும். தொடர்ச்சியாக, இதுபோன்ற உணவுகளைத் தினமும் சாப்பிட்டு வந்தால், கொழுப்புச்சத்து, இதய நோய், உடல் பருமன் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு, அனைத்து நோய்களையும் உடலுக்குள் வேகமாக கொண்டுவந்து விடும்.
இதைத் தவிர்க்க வீட்டிலேயே செய்யக்கூடிய இந்த ஸ்பைஸி கார்ன் – பொட்டேட்டோ நக்கட்ஸ் உதவும்.
என்ன தேவை?
வேகவைத்து தோலுரித்து மசித்த உருளைக்கிழங்கு – ஒன்றரை கப்
ஸ்வீட் கார்ன் முத்துகள் – அரை கப்
சோள மாவு – 2 டேபிள்ஸ்பூன்
பார்மேசன் சீஸ் (துருவியது) – 2 டேபிள்ஸ்பூன்
பதப்படுத்திய மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் (டிபார்ட்மென்டல் ஸ்டோரில் கிடைக்கும்) – அரை டீஸ்பூன்
கொரகொரப்பாக பொடித்த காய்ந்த மிளகாய் – அரை டீஸ்பூன்,
பூண்டுப் பல் – 2 (துருவவும்)
பிரெட் தூள் – கால் கப்
எண்ணெய் – பொரிப்பதற்குத் தேவையான அளவு
சோள மாவு – 2 டேபிள்ஸ்பூன் (கால் கப் தண்ணீரில் கரைக்கவும்)
பிரெட் தூள் (கடைசியில் புரட்ட) – அரை கப்
உப்பு – தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
எண்ணெய், சோள மாவு கரைசல், கடைசியில் புரட்ட வைத்திருக்கும் அரை கப் பிரெட் தூள் தவிர, கொடுக்கப்பட்டுள்ள மற்ற பொருள்கள் அனைத்தையும் கலந்து பிசைந்து, ஒரு மூடியைக் கொண்டு மூடி, ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைக்கவும்.
பின்னர் எடுத்துக் கையில் எண்ணெய் தடவிக்கொண்டு கலவையை இரண்டு கைகொண்டு, திரிப்பது போல குழல் வடிவில் (பைப் மாதிரி) நீளமாக உருட்டவும். உருட்டியதைக் கத்திகொண்டு அரை இன்ச் கனத்துக்கு வெட்டவும்.
இந்தத் துண்டுகளை மீண்டும் ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து எடுத்து, இரண்டு ஓரங்களிலும் லேசாகத் தட்டி, சோள மாவு கரைசலில் தோய்த்து, பிரெட் தூளில் புரட்டி, சூடான எண்ணெயில், கொஞ்சம் கொஞ்சமாக பொரிக்கவும்.