காலை 9 மணிக்கு உணவு சாப்பிட்டால் மதியம் உட்கொள்ள 2 மணி ஆகிவிடுகிறது. அந்த இடைப்பட்ட நேரத்தில் அதாவது 11 மணி அளவில் டீ, சமோசா, வடை என எதையாவது சாப்பிடுகிறோம். இரவு சாப்பிட 9 மணி ஆகிவிடுகிறது. இதனால் மாலை 5 மணிக்கு டீ, பிஸ்கட், பஜ்ஜி, வடை சாப்பிடுகிறார்கள். ஓர் உணவு வேளைக்கும் இன்னொரு வேளைக்கும் இடைப்பட்ட நேரத்தில் உடலுக்கு ஆற்றலைக் கொடுக்க ஏதேனும் தீனி தேவை. அதற்கு சத்தான் இந்த உருளைக்கிழங்கு சீஸ் சேவு உதவும்.
என்ன தேவை?
பெரிய உருளைக்கிழங்கு – ஒன்று (வேகவைத்து, தோல் நீக்கி, நன்கு மசிக்கவும்)
கடலை மாவு – ஒன்றரை கப்
அரிசி மாவு – அரை கப்
கரம் மசாலாத்தூள், சீரகம் – தலா கால் டீஸ்பூன்
வெண்ணெய் – ஒரு டீஸ்பூன்
ஓமம், மிளகாய்த்தூள் – தலா அரை,
டீஸ்பூன் சீஸ் க்யூப் (சதுரத்துண்டு) – ஒன்று (துருவவும்)
எண்ணெய் – பொரிப்பதற்குத் தேவையான அளவு
உப்பு – தேவைக்கேற்ப
எப்படிச் செய்வது?
எண்ணெயைத் தவிர மற்ற எல்லா பொருட்களையும் சேர்த்து நன்கு அழுத்தி, கட்டி இல்லாமல் காராசேவு பதத்தில் மாவு பிசையவும் (தேவைப்பட்டால் சிறிதளவு நீர் சேர்க்கலாம்). வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, சிறு கண் உள்ள காரா சேவு அச்சு அல்லது பெரிய கண் உள்ள ஓமப்பொடி அச்சில் மாவை நிரப்பி, எண்ணெயில் பிழிந்து பொரித்தெடுக்கவும். ஆறியதும் காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.
குறிப்பு: எண்ணெய் அதிகம் சூடாக இருக்கக் கூடாது. மிதமான தீயில் பொரித்தெடுக்கவும். சீஸில் உப்பு இருப்பதால், உப்பைப் பார்த்து சேர்க்கவும். விருப்பமான சீஸ் சேர்க்கலாம்.
-ராஜ்