விருந்தில் பஃபே என்றதும் பலருக்கும் எதைச் சாப்பிடுவது, எதைத் தவிர்ப்பது என மனம் தவிக்கும். ‘இதைத்தான் தினமும் வீட்டுல சாப்பிடறோமே… புதுசா ஏதாவது ட்ரை பண்ணலாம்’ என சிலரும், ‘வழக்கமா வீட்டுல சாப்பிடறதா இருந்தா என்ன, அதே அயிட்டம் இங்கே எப்படியிருக்குன்னு பார்க்க வேணாமா’ என்று சிலரும் பஃபே விருந்தை வயிறு முட்ட, மூச்சு முட்ட சாப்பிடுவார்கள்.
ஆனால் ஒவ்வொரு முறை பஃபேயில் சாப்பிடும்போதும் உங்களை அறியாமல் ஆயிரக்கணக்கான கலோரிகளை உடலில் சேர்த்துக்கொள்கிறீர்கள் என்பதை அறிவீர்களா? பஃபே பிரியர்களே… பஃபே விருந்தை எப்படி ஆரோக்கியமானதாக மாற்றிக்கொள்ளலாம்? இதோ உங்களுக்கான டிப்ஸ்…
பஃபேயில் சாப்பிடப் போகிறோம் என்று தெரிந்ததுமே பலரும் அதற்கு முன்பான உணவுகளைத் தவிர்ப்பதைப் பார்க்கலாம். ‘பஃபேல வேற சாப்பிடணும், அதனால அதுக்கு முன்னாடி ஒண்ணும் சாப்பிட வேணாம்’ என ஆரோக்கியத்தில் அக்கறை உள்ளவர்களாக அதைத் தவிர்ப்பார்கள்.
உண்மையில் ஒரு வேளைக்கான உணவை நீங்கள் தவிர்க்கும்போது, அடுத்த வேளை வழக்கத்தைவிட அதிகமாகச் சாப்பிடுவீர்கள் என்கின்றன ஆய்வுகள். எனவே வழக்கமான இடைவேளைகளில் சரிவிகித உணவைச் சாப்பிடுவதுதான் சரியானது. பஃபேவுக்குச் செல்வதற்கு முன்பும் இது பொருந்தும்.
பஃபேயில் அடுக்கப்பட்டுள்ள உணவுகளைப் பார்த்ததுமே அனைத்தையும் ஒன்றுவிடாமல் தட்டில் அடுக்கிக் கொள்ளாதீர்கள். முதலில் பஃபே உணவுகளை ஒரு நோட்டம் விடுங்கள். எது வேண்டும், எது வேண்டாம் எனப் பொறுமையாக முடிவெடுத்துத் தேர்வு செய்யுங்கள்.

பஃபேயில் அடுக்கப்பட்டிருக்கும் உணவுகளில் பெரும்பாலானவை அதிக கலோரிகள் கொண்டவையாகவே இருக்கும். அவற்றைப் பார்த்ததும் உங்களுக்கு எச்சில் சுரக்கும் என்றாலும், அவற்றில் ரொம்பவும் பிடித்தவற்றிலிருந்து ஒன்றிரண்டை மட்டும் தேர்ந்தெடுங்கள்.
அதுவும் அதிகபட்சமாக 2 முதல் 3 டேபிள்ஸ்பூன் அளவுக்கு மட்டுமே. உங்களுக்குப் பிடித்ததைச் சாப்பிட்டது போலவும் இருக்கும், அதிக கலோரிகள் சேராமலும் இருக்கும்.
வரிசையில் அடுக்கப்பட்டிருக்கும் உணவுகளில் உங்களுக்குப் பிடித்த உணவுப் பாத்திரம் கடகடவென காலியாகியிருக்கும். மற்றவர்கள் அதைத் தட்டில் தேவைக்கதிகமாக நிரப்பியிருப்பதைப் பார்ப்பீர்கள்.
அதற்காக வருத்தப்பட வேண்டாம். ஏதோ அந்த பஃபேதான் உங்களுடைய கடைசி விருந்து என்பது போல ஏங்காதீர்கள். உங்களுடைய விருப்பமான பிற உணவுகளைத் தேர்ந்தெடுத்து, ரசித்து, ருசித்துச் சாப்பிடுங்கள்.
பஃபேயில் வைக்கப்பட்டுள்ள உணவுகளில் சில ‘சைவம்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கலாம். அதனாலேயே அவை ஆரோக்கியமானவை, அளவு பார்க்காமல் சாப்பிடக்கூடியவை என அர்த்தமில்லை.
அவையும் எண்ணெயில் பொரிக்கப்பட்டதாகவோ, அதிக கொழுப்பு சேர்த்து சமைக்கப்பட்டதாகவோ இருக்கலாம். எனவே அந்த உணவுகளில் என்னென்ன சேர்த்துச் சமைத்திருக்கிறார்கள் என்பதைக் கேட்டுத் தெரிந்துகொண்டு சாப்பிடலாம்.
பார்க்கிற எதையும் மிஸ் செய்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் ஜூஸ், சோடா, இனிப்பு சேர்க்கப்பட்ட ஐஸ் டீ, இதர குளிர்பானங்கள் என திரவ உணவுகளையும் சாப்பிட நினைப்பவர்கள் பலர். இவையெல்லாம் தேவையற்ற கலோரிகளை உடலில் ஏற்றுபவை.
எனவே திரவ உணவுகள் விஷயத்தில் கலோரி குறைவான அல்லது கலோரிகளே இல்லாத தண்ணீர், ஃப்ளேவர் சேர்க்கப்பட்ட செல்ட்ஸர் (seltzer), ஃப்ரெஷ்ஷாகத் தயாரிக்கப்பட்ட ஐஸ் டீ அல்லது காபி போன்றவற்றை முயற்சி செய்யலாம்.
அடுத்தது க்ளைமாக்ஸ். தினுசு தினுசாக அடுக்கப்பட்டிருக்கும் டெஸர்ட் உணவுகளை மிஸ் செய்ய யாருக்குத்தான் மனம் வரும்? அங்கே வைக்கப்பட்டுள்ள அனைத்தையும் ருசி பார்க்க வேண்டும் என அவசியமில்லை.
உங்களுக்கு விருப்பமானவற்றில் ஒன்றிரண்டை எடுத்து, சிறிது டேஸ்ட் பார்த்துவிட்டு, உங்களுடன் சாப்பிடுவோருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
சண்டே ஸ்பெஷல்- சம்மணமிட்டுச் சாப்பிடுவோம்!
”தமிழர் விரோத பாஜகவை தமிழகம் ஒருபோதும் மன்னிக்காது”- சு.வெங்கடேசன் எம்.பி