குளிர்காலத்தில் லேட்டா எழுந்தாலும், டேஸ்ட்ஸ்டா சமைக்கணும்; காய்கறி நறுக்குறது, பாத்திரம் கழுவறதுனு நிறைய வேலை வைக்கக் கூடாது; சிம்பிளா சமைச்சாலும் சத்து குறையக்கூடாது என்று நினைப்பவர்களுக்கு சட்டென்று செய்யக்கூடிய இந்த கோதுமை தோசை ரெசிப்பி உதவும்.
என்ன தேவை?
கோதுமை மாவு – இரண்டு கப்
தண்ணீர் – 4 கப்
சீரகம் – அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு
கடுகு – கால் டீஸ்பூன்
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
எண்ணெய் – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிது (விருப்பப்பட்டால்)
எப்படிச் செய்வது?
வாய் அகன்ற பாத்திரத்தில், கோதுமை மாவு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, சீரகம் ஆகியவற்றைப் போட்டு, நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும். அடுப்பில் கடாய் வைத்து, எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு தாளிக்கவும்.
தொடர்ந்து, காய்ந்த மிளகாய், பெருங்காயம் சேர்த்து, இதை அப்படியே மாவில் கொட்டி, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து, கட்டி படாமல் திக்காக கரைத்து, உப்பு சரிபார்க்கவும்.
அடுப்பில், மிதமான தீயில் நான்-ஸ்டிக் தவாவை வைத்து, தோசையாக ஊற்றி, எண்ணெய் விட்டு, இருபுறமும் வேகவிட்டு எடுத்து, சட்னியோடு பரிமாறவும்.