கிச்சன் கீர்த்தனா : மொஹல் மட்டன் கிரேவி

Published On:

| By Minnambalam

மொஹல் மட்டன் கிரேவி

மொஹல் உணவின் தனித்துவமான ருசி, மணம் மற்றும் பசையான சேர்மானம் உணவின் சுவையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும். வீட்டிலேயே சமைக்க உதவும் இந்த மட்டன் கிரேவி சமைத்தவுடன் சாப்பிடத் தூண்டும்  உங்கள் வீட்டிலுள்ளவர்களை அசத்தும்.  

என்ன தேவை?
மட்டன் – அரை கிலோ
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 2
சிவப்பு மிளகாய் (காஷ்மீரி மிளகாய்) – 2
தயிர் – ஒரு கப்
இஞ்சி விழுது – அரை டேபிள்ஸ்பூன்
பூண்டு விழுது – அரை டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் (பச்சை மற்றும் கறுப்பு)  – 4
பிரியாணி இலை – 2
மராட்டி மொக்கு – ஒன்று
கிராம்பு – 4
பட்டை – 4 துண்டுகள்  
சோம்பு – அரை டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
கசகசா – 2 டீஸ்பூன்
நெய் – 2  டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – கால் கப்
ஸ்பெஷல் கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்

எப்படிச் செய்வது?
முதலில் ஒரு வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். இத்துடன் காஷ்மீரி மிளகாய், இஞ்சி விழுது, பூண்டு விழுது சேர்த்து அரைத்துக்கொள்ளவும். மட்டன் துண்டுகளுடன் உப்பு, மஞ்சள்தூள், தயிர், வெங்காய விழுதைச் சேர்த்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். ஒரு குக்கரில் நெய்விட்டு அதில் நறுக்கிய ஒரு வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். இத்துடன் மட்டன் துண்டுகளைச் சேர்த்து வேகவிடவும்..
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து கிராம்பு, ஏலக்காய், பட்டை, சோம்பு, பிரியாணி இலை, சீரகம், கசகசா, மராட்டி மொக்கு  நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய் தாளித்து, இதில் வேகவைத்த மட்டனைச் சேர்த்து வதக்கவும் (நீர் சேர்க்காமல் வதக்க வேண்டும்).

இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு ஸ்பெஷல் கரம் மசாலாவைச் சேர்த்து அத்துடன் தண்ணீரையும் சேர்த்து, தேவையான கிரேவி வரும் வரை வதக்கவும். புதினா வையோ, கொத்தமல்லியையோ அலங்கரிக்க பயன்படுத்தலாம்.

ஸ்பெஷல் கரம் மசாலாத்தூள் எப்படிச் செய்வது?
சம அளவு பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், சோம்பு. பிரியாணி இலை, காஷ்மீரி மிளகாய், சிவப்பு  மிளகாய், மல்லி, கசகசா, மிளகு, மராட்டி மொக்கு, ஜாதிபத்ரி, கால் டீஸ்பூன் ஜாதிக்காய்பொடி, மாசிக்காய் பொடியை வெறும் கடாயில் வறுத்து ஆறிய பிறகு பொடி செய்யவும்.

இட்லி மாவு போண்டா

விரைவில் 8 வழிச்சாலை? நிதின் கட்கரி தகவல்!