கிச்சன் கீர்த்தனா : பொரி உப்புமா

Published On:

| By Minnambalam

காலையில் எழுந்தவுடன் ரொட்டித்துண்டில் ஜாம் தடவியோ, கார்ன் ஃப்ளேக்ஸை பாலில் கலந்தோ… நின்றுகொண்டே சாப்பிட்டுவிட்டு பள்ளி, கல்லூரி, அலுவலகம் விரையும் அவசர உலகத்தின் பிரதிநிதிகளாக நம்மில் பலரும் ஆகிவிட்ட காலகட்டத்தில் ஆரோக்கியமான உணவு வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு இந்த பொரி உப்புமா ரெசிப்பி உதவும்.

என்ன தேவை?

பொரி – அரை கப்
பெரிய வெங்காயம் – ஒன்று
கேரட் – பாதி
பச்சைப் பட்டாணி – சிறிது
நிலக்கடலை – இரண்டு டேபிள்ஸ்பூன்
கடுகு – கால் டீஸ்பூன்
மஞ்சள்தூள் – சிறிது
மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு – சிறிது
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

வாய் அகலமான பாத்திரத்தில் பொரியைப் போட்டு தண்ணீர் பைப்பின் அடியில் வைத்து பொரி முழுவதும் மூழ்கியதும் பைப்பை அடைத்து தண்ணீரை இறுத்து வைத்துக் கொள்ளவும்.

வெங்காயத்தைப் பொடியாகவும், கேரட்டை சிறிய துண்டுகளாகவும் நறுக்கி வைத்துக் கொள்ளவும். அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு தாளித்து, நிலக்கடலை மற்றும் வெங்காயத்தைச் சேர்த்து நன்கு வதக்கவும்.

அடுத்து கேரட், பச்சை பட்டாணி சேர்த்து தீயைக் குறைத்து வைத்து வதக்கவும். கேரட் கிரன்ச்சியாக மாறும் போது பொரி, உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து, குறைந்த தீயில் சிறிது நேரம் வதக்கி தீயை அணைத்து எலுமிச்சைச் சாறு சேர்த்து, கிளறி பரிமாறவும்.

கோதுமை தோசை

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel