குளிர்காலத்தில் ஈரப்பதமான காற்றை மனம் உற்சாகமாக வரவேற்கும் நேரத்தில் தொண்டைக்கு இதமும், உடலுக்கு ஆரோக்கியமும், நோய் எதிர்ப்பு சக்தியும் தரக்கூடிய இந்த பனீர் சூப் செய்து பருகலாம். உடனடி புத்துணர்ச்சி பெறலாம்.
என்ன தேவை?
துருவிய பனீர் – 50 கிராம் (சிறிதளவு அலங்கரிக்க எடுத்து வைக்கவும்)
பெரிய வெங்காயம் – 1
பூண்டு – 5 பல்
மிளகு மற்றும் மிளகுத்தூள் – தலா ஒரு டீஸ்பூன்
மைதா, வெண்ணெய் – தலா ஒரு டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
காய்ச்சிய பால் – 150 மில்லி
தண்ணீர் – 200 மில்லி
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். பூண்டுப்பல்லைத் தட்டி வைக்கவும். வாணலியில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் நறுக்கிய வெங்காயம், பூண்டு, மிளகு, கறிவேப்பிலை, துருவிய பனீர் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். கலவை நன்கு வேக வேண்டும். ஆனால் நிறம் மாறக்கூடாது.
இதில் மைதா மாவைச் சேர்த்து, தீயைக் குறைத்து சிறிது நேரம் வதக்கவும். இத்துடன் 200 மில்லி தண்ணீர் சேர்த்து, தீயை மிதமாக வைத்து, கலவை கெட்டிப்படாத அளவுக்குக் கிளறவும். கலவை கொதித்ததும், வடிகட்டவும். வடிகட்டியதை மற்றொரு வாணலியில் ஊற்றவும். அதனுடன் பால், மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும். ஒரு சிறிய பவுலில் இந்த சூப்பை ஊற்றி, துருவிய பனீர் தூவி சூடாகப் பரிமாறலாம்.