சுறுசுறுப்பு அளிக்கும் மொறுமொறுப்புத் தின்பண்டம், பிஸ்கட் வகையைச் சேர்ந்த குக்கீஸ். டீக்கடை பாட்டில்களில் வைக்கப்பட்டுள்ள சாதாரண பிஸ்கட்கள் முதல் காபி ஷாப்களில் பானங்களோடு பரிமாறப்படுகிற வெரைட்டி குக்கீஸை கடையில் வாங்கி சாப்பிடாமல், உடலுக்கு ஆரோக்கியம் தரும் இந்தக் கேழ்வரகு குக்கீஸை வீட்டிலேயே செய்து ருசிக்கலாம்.
குழந்தைகளை கால்சியம் நிறைந்த கேழ்வரகை சாப்பிட வைப்பது கடினமான காரியம். அதுவே குக்கீஸாகச் செய்து கொடுக்கும்போது விரும்பிச் சாப்பிடுவார்கள்.
என்ன தேவை?
கேழ்வரகு மாவு – முக்கால் கப்
கோதுமை மாவு – அரை கப்
கொப்பரைத் தேங்காய்த் துருவல் – முக்கால் கப்
வெண்ணெய் – 150 கிராம்
பொடித்த சர்க்கரை – 150 கிராம்
வெனிலா எசென்ஸ் – ஒரு டீஸ்பூன்
முட்டை – ஒன்று
எப்படிச் செய்வது?
ஒரு பவுலில் கேழ்வரகு மாவு, கோதுமை மாவு, கொப்பரைத் தேங்காய்த் துருவல், பொடித்த சர்க்கரை ஆகிய அனைத்தையும் ஒன்றாகக் கலந்துவைக்கவும்.
சர்க்கரை மற்றும் வெண்ணெயை ஒரு பவுலில் ஒன்றாகச் சேர்த்து நுரைக்க அடித்து, அதனுடன் முட்டை, வெனிலா எசென்ஸ் சேர்த்துக் கலக்கவும். இதை, கலந்து வைத்துள்ள மாவில் சிறிது சிறிதாக சேர்த்துப் பிசையவும்.
பிறகு கால் இஞ்ச் உயரத்துக்கு மாவை திரட்டி, பிஸ்கட் கட்டரால் மாவை துண்டுகளாக்கி கொள்ளவும். மைக்ரோவேவ் அவன் டிரேயில் பிஸ்கட்டுகளை வைத்து 180 டிகிரி செல்சியஸ் சூட்டில் 10-15 நிமிடங்கள் ‘பேக்’ செய்து எடுக்கவும்.