கிச்சன் கீர்த்தனா: கேழ்வரகு சேமியா – கொள்ளு வடை!

குழந்தைகளாகட்டும்… பெரியவர்களாகட்டும் அனைவருக்கும் ஏற்றது கேழ்வரகு. ஏழைகளின் உணவாக முன்னொரு காலத்தில் இருந்தது, இன்று பலருக்கு உயிர் காக்கும் உணவாக மாறிவிட்டது.

வெப்பமான பகுதிகளிலும் விளையும் தன்மை கொண்டது. அரிசி, கோதுமையைவிட கேழ்வரகில் ஊட்டச்சத்துகள் அதிகம். குறிப்பாக சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், நார்ச்சத்து, வைட்டமின் பி அதிக அளவில் உள்ளன. இதனால் எலும்புத் தேய்மானம், ரத்தச் சோகை, இதய நோய், மலச்சிக்கல், சர்க்கரை நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சிறந்தது. குழந்தைகளுக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தரும் ராகி சேமியாவுடன் உடலுக்கு பலம் சேர்க்கும் கொள்ளு சேர்த்து வடை செய்து இந்த வீக் எண்டை கொண்டாடுங்கள்.

என்ன தேவை?
கேழ்வரகு சேமியா – ஒரு கப்
கொள்ளு மாவு – அரை கப்
கடலைப்பருப்பு – அரை கப்
வெங்காயம் – ஒன்று (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – 2 ஈர்க்கு (நறுக்கியது)
இஞ்சி – ஒரு சிறிய துண்டு (நறுக்கியது)

எப்படிச் செய்வது?
கேழ்வரகு சேமியாவை மூன்று நிமிடங்கள் தண்ணீரில் நனைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். கொள்ளுவை வறுத்து மாவாக்கிக் கொள்ளவும். கடலைப்பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து அரைத்துக்கொள்ளவும். ஊறிய முழுப் பருப்பை ஒரு டீஸ்பூன் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரைத்த கடலை மாவுடன் இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, கறிவேப்பிலை, கொள்ளு மாவு ஊறிய கடலைப்பருப்பு சேர்த்து வேண்டிய அளவு தண்ணீர் விட்டு வடை மாவுப் பதத்துக்குக் கலந்து கேழ்வரகு சேமியாவைச் சேர்த்து வடையாகத் தட்டி, வாணலியில் எண்ணெய்விட்டு வடையைப் போட்டு முறுகலாகப் பொன்னிறத்துடன் வறுத்து எடுக்க, சுவையான கேழ்வரகு சேமியா – கொள்ளு வடை ரெடி.
குறிப்பு: இஞ்சி – பூண்டு விழுது சேர்த்தும் செய்யலாம்.

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts