திருநெல்வேலி மாவட்டத்தில் அரசுப் பள்ளிக்கு மாணவர்களை காரில் தலைமை ஆசிரியர் அழைத்து வருவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையை அடுத்த அப்புவிளை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றுபவர் அருள்தாசன். இவர் தினமும் காலையில் பள்ளிக்கூடத்துக்கு காரில் வரும்போது, பக்கத்து கிராமங்களில் உள்ள ஏழை மாணவ-மாணவிகள் சிலரையும் தனது காரிலேயே பள்ளிக்கூடத்துக்கு அழைத்து வருகிறார்.
பின்னர் மாலையில் பள்ளிக்கூடம் முடிந்ததும் காரிலேயே மாணவ-மாணவிகளை அழைத்து சென்று, அவர்களது வீடுகளில் இறக்கி விட்டு செல்வது அந்தப் பகுதியில் உள்ளவர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இதுகுறித்து பேசியுள்ள தலைமை ஆசிரியர் அருள்தாசன், ”நீண்ட தூரம் பள்ளிக்கூடத்துக்கு பயணித்து வர இயலாத மாணவ-மாணவிகளைக் கண்டறிந்து, அவர்களை என் காரில் பாதுகாப்பாக அழைத்து வருகிறேன். இதனால் மாணவர்கள் உற்சாகமாக கல்வி கற்கின்றனர்.
மேலும், மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கும் வகையில், பள்ளிக்கூடத்தில் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் கணினி, சிலம்பாட்டம், யோகாசனம் போன்ற சிறப்புப் பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது” என்று கூறியுள்ளார்.
-ராஜ்