இந்திய வங்கித்துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் மத்திய அரசு அடுத்த கட்ட வங்கி இணைப்பு குறித்து ஆலோசனைகளை சில வாரங்களுக்கு முன்பு தொடங்கியது.
இந்நிலையில், பொதுத்துறை வங்கிகளை தகர்க்கும் வகையில் தனியார் வங்கி பிரிவில் புதிதாக ஒரு வங்கி உருவாகி வருகிறது. இந்தியாவில் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக இருக்கும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு கடும் போட்டியாக தனியார் வங்கியான ஹெச்டிஎப்சி உருவெடுக்கிறது.
ஹெச்டிஎப்சி தனது வீட்டுக்கடன் சேவை நிறுவனத்தை தங்களுடைய வங்கியுடனே இணைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த இணைப்புக்கு பிறகு சொத்து மதிப்பிலும் , சந்தை மதிப்பிலும் ஹெச்.டி.எஃ.ப்.சி. மிகப்பெரிய உயரத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹெச்டிஎப்சி வங்கி மற்றும் ஹெச்டிஎப்சி வீட்டுக்கடன் நிறுவன இணைப்பிற்கு பின்பு இக்கூட்டணியின் மொத்த சந்தை மதிப்பு 17.86 லட்சம் கோடி ரூபாயாக உயரும். (ஹெச்டிஎப்சி வங்கி ரூ.7.76 டிரில்லியன் மற்றும் ஹெச்டிஎப்சி வீட்டுக்கடன் நிறுவனம் ரூ.4.16 டிரில்லியன்).
இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாக இருக்கும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் மொத்த சொத்து மதிப்பு 26.64 லட்சம் கோடி ரூபாய், ஹெச்டிஎப்சி கூட்டணி அடுத்தச் சில வருடத்தில் தனது திட்டமிடல் மற்றும் செயல்படுத்தும் முறை மூலம் இதை கட்டாயம் எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய கடன் சந்தையில் பெரிய தொகையில் கடன் கொடுப்பதில் முன்னோடியாக இருக்கும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு போட்டியாக ஒரு தனியார் வங்கி வருவது இதுவே முதல் முறை. பொதுத்துறை வங்கிகளும் சரி, நிறுவனங்களும் சரி அதன் மீதான நம்பிக்கை, வர்த்தக ஆதிக்கம், அதிகப்படியான வாடிக்கையாளர் வாயிலாகத் தான் தொடர்ந்து இயங்கி வருகிறது.
ஹெச்டிஎப்சி கூட்டணியின் வெற்றி பொதுத்துறை வங்கிகளின் சரிவுப் பாதையாக மாறலாம். ஏற்கனவே பொதுத்துறை வங்கிகளில் வாடிக்கையாளர் சேவை என்பது பெரும் பின்னடைவாக பார்க்கப்படும் நிலையில் என்ன செய்யப்போகிறது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்-