வேலை நிறுத்த விவகாரத்தில் அரசும் போக்குவரத்து தொழிற்சங்கங்களும் பிடிவாதமாக இருப்பது ஏன் என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜனவரி 10) கேள்வி எழுப்பியுள்ளது.
அரசு போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், கருணை அடிப்படையில் வேலைக்கு விண்ணப்பித்து காத்திருப்பவர்களுக்கு பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது வேலை நிறுத்தத்தில் ஈடுபடாத தொழிற்சங்கத்தினரை வைத்து தமிழ்நாடு அரசு பேருந்துகளை இயக்கி வருகிறது. இருப்பினும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பேருந்துகள் சரியாக இயங்காததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் சூழலில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினரின் வேலை நிறுத்தத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, நீதிபதி பரதசக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி முறையீடு செய்தார். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.
அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தை மனுவாகத் தாக்கல் செய்யும் பட்சத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.
மேலும் மனு குறித்த விவரங்களை அரசு தரப்பிற்கும், போக்குவரத்து கழகம் மற்றும் தொழிற்சங்கங்களுக்கும் வழங்கவும் உத்தரவிட்டனர்.
அதன்படி மனு தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தது.
அப்போது, ”வேலை நிறுத்த விவகாரத்தில் தீர்வு காண்பதில் அரசுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் என்ன பிரச்சனை உள்ளது” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அரசு தரப்பில், ”பல கட்டங்களில் பேச்சுவார்த்தை நடந்து நிறைவு பெறாத நிலையில் மீண்டும் ஜனவரி 19 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது” என்று பதிலளிக்கப்பட்டது.
தொடர்ந்து தொழிற்சங்கத்தின் தரப்பில், ”கோரிக்கைகளை ஏற்காததால் தான் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டது.
அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ”தமிழகத்தின் மிகப்பெரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையின் போது வேலைநிறுத்தத்தால் மக்களுக்கு ஏன் இடையூறு செய்ய வேண்டும்.
இதனால் அதிகம் பாதிக்கப்படுவது மக்கள் தான். நகரத்தில் உள்ள மக்கள் அதிகமாக பாதிக்கப்படவில்லை என்றாலும் கிராமத்திற்கு செல்லக்கூடிய மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
போராட்டம் நடத்த வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் பண்டிகை நேரத்தில் போராட்டம் நடத்துவது முறையற்றது என்று தான் கூறுகிறோம். அரசும் சரி, போக்குவரத்து தொழிற்சங்கங்களும் சரி ஏன் இந்த விவகாரத்தில் பிடிவாதமாக இருக்கிறீர்கள்” என்று நீதிபதிகள் கேள்விகளை எழுப்பினர்.
மேலும், ஓய்வூதியதாரர்களுக்கு மட்டும் ஜனவரி மாதத்திற்குள் அகவிலைப்படி வழங்குவது குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை இன்று மதியம் 2.15 மணிக்கு ஒத்திவைத்தனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
பஸ் ஸ்ட்ரைக்: பல்லவன் இல்லத்தில் முற்றுகை போராட்டம்!
முரசொலி பஞ்சமி நில விவகாரம்: விசாரணையை தொடர உயர்நீதிமன்றம் உத்தரவு!