”எப்படி சலுகை காட்ட முடியும்?” : ராஜேஷ் தாஸ் வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி!

Published On:

| By indhu

HC question in former Special DGP Rajesh Das case

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் ”இரு நீதிமன்றங்களால் தண்டனை வழங்கப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்க்கு எப்படி சலுகை காட்ட முடியும்?” என இன்று (ஏப்ரல் 15) சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கடந்த 2௦21ஆம் ஆண்டு பெண் காவல் ஆய்வாளருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது புகார் எழுந்தது.

இதனை விசாரித்த விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. மேலும், இந்த தீர்ப்பை விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி உறுதி செய்தது.

இந்த நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கவும், வழக்கில் சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்கவும் கோரி ராஜேஷ் தாஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு இன்று (ஏப்ரல் 15) நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த விசாரணையின்போது ராஜேஷ் தாஸ் தரப்பில், பல ஆண்டுகளாக காவல்துறைக்கு தலைமை பொறுப்பு வகித்ததால், சிறைக்கு சென்றால் அது தனக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தும் என்றும்,

மேலும், ராஜேஷ்தாஸ் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு மேல் முறையீட்டில் ஒருவேளை விடுதலை செய்யப்பட்டால் என்ன ஆகும் எனவும் வாதிடப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதி தண்டபாணி, ”முதலில் சரணடைந்து விட்டு பிறகு ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தால் அதுகுறித்து பரிசீலிக்கலாம். பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் இரு நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்ட நபருக்கு எப்படி சலுகை காட்ட முடியும்?” என கேள்வி எழுப்பினார்.

மேலும், ராஜேஷ் தாஸின் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரும் மனு மீதான காவல்துறையின் நிலைப்பாடு என்ன? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்த குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ், தண்டனையை நிறுத்தி வைக்கக்கூடாது எனவும், ராஜேஷ் தாஸ்க்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும், ராஜேஷ் தாஸ் மனு குறித்து பதில் அளிக்க அவகாசம் வேண்டுமெனவும் வழக்கறிஞர் முனியப்பராஜ் கேட்டுக்கொண்டார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, இந்த வழக்கின் விசாரணையை வரும் ஏப்ரல் 17 தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மின்னம்பலம் மெகா சர்வே: கிருஷ்ணகிரி… சிகரம் ஏறுவது யார்?

நடிகை வரலட்சுமி நிச்சயதார்த்தம்…. முதல்முறையாக மனம் திறந்த விஷால்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share