HC courts questions tamilnadu government

ஆன்லைன் ரம்மி அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டானது எப்படி?: உயர்நீதிமன்றம்!

தமிழகம்

தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தில் ஆன்லைன் ரம்மி அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டாக வகைப்படுத்தப்பட்டது எப்படி என்று தமிழக அரசிடம் உயர்நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 17) கேள்வி எழுப்பியுள்ளது.

ஆன்லைன் சூதாட்டங்களுக்கு எதிராக தமிழக அரசு தடை சட்டம் இயற்றியதை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தாக்கல் செய்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

அப்போது, “ஆன்லைனில் விளையாடுபவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள முடியாது. எதிரில் விளையாடுபவர் யார் என்றோ, கார்டுகளை கலைத்துப் போடுபவர் யார் என்றோ தெரியாது.

போனஸ் வழங்கி அடிமையாக்குகின்றனர். இதன் மூலம் விளையாட்டு நிறுவனங்கள் பணம் சம்பாதிக்கின்றன.

வழக்கமான ரம்மி விளையாட்டை விட இது முழுக்க முழுக்க வித்தியாசமானது. இதை அனுமதிக்க கூடாது என்பதற்காகவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது” என்று வாதிடப்பட்டது.

இதனைக் கேட்ட நீதிபதிகள், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் வாதங்களுக்காக விசாரணையை ஆகஸ்ட் 17 ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

தொடர்ந்து இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், “ஆன்லைன் ரம்மியால் ஏற்பட்ட உயிரை மாய்த்துக்கொள்ளும் நிகழ்வுகளைத் தொடர்ந்தே தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

பொதுமக்களுக்கு அநீதி இழைக்கும் ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்ய அரசுக்கு அதிகாரம் உள்ளது” என்று குறிப்பிட்டார்.

அப்போது தலைமை நீதிபதி கங்காப்பூர்வாலா, “உச்சநீதிமன்றம் ஆன்லைன் விளையாட்டைத் திறமைக்கான விளையாட்டு என்று தெரிவித்துள்ள நிலையில், தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தில் அதிர்ஷ்டத்துக்கான சட்டம் என எப்படி வகைப்படுத்தப்பட்டது” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், “ரம்மியை நேரடியாக விளையாடும் போது தான் அது திறமைக்கான விளையாட்டாக கருத முடியும். ஆன்லைனில் விளையாடுவதால் அதனை அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டாக வகைப்படுத்தப்பட்டது” என்று விளக்கம் அளித்தார்.

இதனையடுத்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில், “ஆன்லைனில் ரம்மியை விளையாடினால் அது அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டாக மாறும் என்பதை ஏற்க முடியாது” என்று வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

மோனிஷா

மீனவர்கள் குடும்பத்துடன் கலந்துரையாடிய முதல்வர் ஸ்டாலின்

வந்தியத் தேவன் எம். ஜி. ஆரு: அப்டேட் குமாரு

+1
0
+1
0
+1
0
+1
1
+1
2
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *