சத்குரு
‘நம்மை வெறுப்பேற்றுபவரையும் விரும்புவது சாத்தியமே’ என உணர்த்தும் இந்தக் கட்டுரை, உறவுச் சிக்கல்களை அவிழ்க்கும்படியாக அமைகிறது. ‘என்னப் புரிஞ்சக்கவே மாட்றாங்கப்பா…’ எனப் புலம்புபவர்கள் இதைப் படித்து உணர்ந்தால், அற்புத உறவுகளை அனுபவிக்கலாம்…
உங்களை எரிச்சலடையச் செய்பவர்களை எப்படி நேசிப்பது? இது ஒவ்வொரு மனிதனிடத்திலும் ஆழமாய் எழும் ஒரு கேள்வி. அவர்களை அன்பு செய்வது போல நடிக்க வேண்டாம், அவர்கள் உங்களை எரிச்சலடையச் செய்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொண்டாலே போதும்.
சரி, அவர்கள் உங்களை எதற்காக எரிச்சலடையச் செய்ய வேண்டும்? நீங்கள் எதிர்பார்த்தது போல் அவர்கள் இல்லை என்பதுதானே பதில். அவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ அப்படி அவர்கள் இல்லை. அதே சமயம் நீங்கள் தீவிரமான கடவுள் பக்தர் என்றும் பிரகடனப்படுத்திக் கொள்கிறீர்கள்.
நீங்கள் கடவுளை நம்புபவராக இருந்தால், நீங்கள் வெறுக்கின்றீர்களே அவரும் கடவுளின் படைப்பு என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. அதனால் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள். நீங்கள் வெறுப்படைவதே ‘எது சரி, எது தவறு’ என்று நீங்கள் முன்முடிவு எடுத்துவிடுவதால்தான். தங்கள் செய்முறையை ஒருவர் கொஞ்சம் மாற்றிக் கொண்டாலே, “இது தான் சரி,” என்ற உங்களுடைய பிடிவாதத்தை அசைத்து விடலாம். அதன் பிறகென்ன அவர்களை வெறுக்க வேண்டியதுதான், ஏன் கொலை செய்யக் கூட எண்ணம் தோணலாம்.
உலகிலுள்ள எல்லோரும் உங்களைப் போல் இருக்க வேண்டும் என்னும் உங்களுடைய எதிர்பார்ப்பின் விளைவுதான் இது. உலகிலுள்ள எல்லோரும் உங்களைப் போல இருந்தால், உங்களால் இங்கு வாழ முடியுமா? ஏன் உங்கள் வீட்டில் உங்களைப் போல் இன்னொருவர் இருந்தால் உங்களால் அங்கு வாழ இயலுமா? உலகில் உள்ளோர் எல்லாம் தனி குணத்துடன் இருப்பது நல்லதுதான்.
இந்த உலகில் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிரும் மிகத் தனித்தன்மை வாய்ந்தது. உங்களுக்கு அருகில் அமர்ந்திருக்கும் அந்த மனிதரைப் பாருங்கள், உலகில் அவர் போல் இன்னொரு மனிதரை உங்களால் அடையாளம் காண இயலுமா? இவரைப் போல் ஒருவர் இல்லை, இவரைப் போல் இன்னொருவர் வரப்போவதும் இல்லை. இந்த மனிதர் தன்னேரில்லாத ஒருவர். இந்த உயிரைப் போல் இன்னொரு உயிர் இல்லை என்பதை நீங்கள் உணர்ந்தால், எவ்வளவு விலை மதிப்பில்லாத உயிர் இது என்பதை நீங்கள் பார்த்தால், அவர் உங்களை எப்படி எரிச்சலடையச் செய்ய முடியும்?
உங்களைச் சுற்றியுள்ள உயிர்களை கொஞ்சம் திரும்பிப் பாருங்கள், அவர்கள் அனைவரும் தனித்துவமான உயிர்கள் என்பதை உணர்ந்து கொள்வீர்கள். அதன்பின் வெறுப்பது என்ற கேள்விக்கு இடமில்லையே? உங்கள் கண் குருடாக உள்ளது, நீங்கள் எரிச்சலடைவதற்கான காரணமும் அதுவே. உங்கள் கண்களைத் திறந்து உங்களைச் சுற்றியுள்ள உயிர்களை பார்த்தால், நீங்கள் எரிச்சலடைய முடியுமா என்ன?
இவ்வுலகில் பல்வேறு விதமான சிக்கலான உறவுமுறைகளுக்குள் நீங்கள் வாழ்கிறீர்கள். மனிதர்களின் குறைபாடுகளையும் அவர்களின் தகுதிகளையும் புரிந்து கொண்டு என்ன செய்ய முடியும் என்பதைப் பார்த்து செய்யுங்கள். அப்போதுதான் சூழ்நிலையை உங்களுக்கு தேவையானவாறு மாற்றியமைக்க உங்களால் இயலும். பிறர் உங்களை புரிந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுவதெல்லாம் சரிதான், ஆனால் அது நடக்கப் போவதில்லை! ஒரு உறவு உங்களை நெருங்க நெருங்க அவரைப் புரிந்து கொள்ள நீங்கள்தான் இன்னும் பிரயத்தனப்பட வேண்டும்.
பல மாதங்களாக ஒரு மனிதர் கோமாவிற்கு செல்வதும் அதிலிருந்து மீண்டு வருவதுமாக இருந்தார். அவருடைய மனைவி இரவும் பகலும் அவர் அருகில் இருந்து அவரை கவனித்துக் கொண்டார். கவனம் திரும்பிய ஒரு கணத்தில், அவளை அருகில் வருமாறு சைகை செய்தான் கணவன். அருகில் அமர்ந்த அவளிடம், “என்னோட கஷ்ட காலத்தை பத்தி நான் யோசிச்சிட்டு இருந்தேன்… என்னை வேலையிலேர்ந்து சஸ்பெண்ட் பண்ணப்பவும் நீ என்னோட இருந்த, என்னோட வியாபாரம் மூழ்கிப் போனப்பவும் நீ என்னோட இரவும் பகலும் வேலை செஞ்சிட்டு என் கூட இருந்த, என்னை யாரோ சுட்டப்போ அப்பவும் நீ என்னோட தான் இருந்த, இப்போ… நான் உடம்பு சரியில்லாம சரிஞ்சு கிடக்கிறேன் இப்பவும் நீ என்னோட தான் இருக்கிற. இதை எல்லாத்தையும் நான் நினைச்சு பார்க்கும் போது என்னோட துரதிர்ஷ்டமே நீ தான்னு தோணுது,” என்றார்.
ஏதோ அடுத்த நபருக்கு குறைபாடுள்ள புரிதல் இருக்கிறது என்று அர்த்தமல்ல. நீங்கள் உருவாக்கும் சூழ்நிலைகளால் மற்றொரு நபர் உங்களை சிறப்பான முறையில் புரிந்து கொள்ள முடியும். நீங்கள் மற்றொருவரை புரிந்து கொள்ள இயலாத போது, அவர் உங்களை புரிந்து கொள்ள வேண்டும், உங்களுக்கு இணங்கி நடக்க வேண்டும் என்று உங்கள் எதிர்பார்ப்புகளை நீட்டிக் கொண்டே போனால், வம்புகளில் தான் போய் முடியும். உங்கள் எல்லைக் கோட்டை அவர் தாண்டினால் உங்களுக்கு பைத்தியம் பிடிக்கும், அவர் எல்லைக் கோட்டை நீங்கள் தாண்டினால் அவருக்கு பித்து பிடிக்கும்.
அதுவே உங்கள் புரிந்து கொள்ளும் திறனை அவர்களுடைய புரிதலுக்கெல்லாம் அப்பாற்பட்டு நீங்கள் வளர்த்துக் கொண்டால், அவர்களுடைய புரிதலும் உங்களுடைய புரிதலுடன் இணக்கமாகிவிடும். அவர்களுடைய வரையறைகளையும் திறன்களையும் உங்களால் அரவணைத்துப் போக முடியும்.
எல்லா மனிதர்களிடமும் சில நல்ல குணங்களும் உள்ளன, சில கெட்ட குணங்களும் உள்ளன. இதனை உங்கள் புரிந்து கொள்ளும் திறனிற்குள் உள்ளடக்கக் கற்றுக் கொண்டால் உறவுகள் உங்களுக்கு வேண்டியவாறு இயங்கும். அவர்களுடைய புரிதலின் போக்கிற்கு விட்டுவிட்டால் வாழ்க்கை தற்செயலாய் மாறிவிடும். ஒருவேளை உங்களுடைய உறவினர்கள் பெருந்தன்மையான மனதுடன் இருந்தால், உறவுமுறை சுமூகமாக போகும். அவர்கள் அப்படி இல்லாத பட்சத்தில் உறவு முறியும்.
உங்கள் நெருங்கிய உறவோ, உங்கள் அலுவலோ, உங்கள் வியாபாரமோ, இல்லை உலகமோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், உங்கள் வாழ்க்கையை முடிவு செய்பவராக நீங்கள் இருக்க விரும்புகிறீர்களா? ஆம் என்றால், எல்லா மனிதர்களையும், எல்லா பொருட்களையும் உங்கள் புரிதலுக்குள் உட்படுத்திக் கொள்ளுங்கள்.
மக்களின் மடத்தனத்தையும் தாண்டியதாய் உங்கள் புரிதல் மலர வேண்டும். உங்களைச் சுற்றி மிக அற்புதமான பல மனிதர்கள் இருக்கிறார்கள், ஏதோ ஒரு சில நிமிடங்கள் அவர்கள் கொஞ்சம் கிறுக்குத்தனமாக நடந்து கொள்கிறார்கள். அவர்களைப் புரிந்து கொள்ளாத பட்சத்தில், நீங்கள் இழப்பது அவர்களைத்தான். அவர்களது கோபங்களையும், அவர்களுடைய உணர்வுகளையும் புரிந்து கொள்ளாத பட்சத்தில் நீங்கள் நிச்சயமாக அவர்களை இழப்பீர்கள். ஆனால் அவர்களை புரிந்து கொள்ளும் பட்சத்தில் அவர்களை எப்படி கையாள்வது என்பதையும் புரிந்து கொள்வீர்கள்.
வாழ்க்கை ஒரு நேர்கோடல்ல. வாழ்க்கை முறைப்படி நடப்பதற்கு நீங்கள் பல விஷயங்களைச் செய்ய வேண்டி வரும். உங்கள் புரிந்து கொள்ளும் திறனை கோட்டை விட்டால், உங்கள் திறமையையும் அதனுடன் சேர்த்தே இழந்துவிடுவீர்கள். தனிப்பட்ட உறவுகள் ஆகட்டும் அல்லது வேலை சூழ்நிலையில் நிலவும் மேலாண்மை ஆகட்டும் இரு இடங்களிலும் உங்களது தேவை – புரிதல். புரிதல் இல்லாத பட்சத்தில் கனிவு தரும் சுகமான உறவுகள் மலராது.
மீண்டும் சனிக்கிழமை சந்திப்போம்….