ஹாமூன் புயல் காரணமாக தமிழ்நாட்டில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று புயலாக மாறியது. இந்த புயலுக்கு ’தேஜ்’ என்று பெயரிடப்பட்டது.
இந்த தேஜ் புயல் ஏமன் மற்றும் ஓமன் நாடுகளுக்கிடையே இன்று (அக்டோபர் 24) கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை 2.30 மணி முதல் 3.30 மணிக்குள் தேஜ் புயல் ஏமன் கடற்கரையில் கரையை கடந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேஜ் புயல் கரையை கடக்கும் போது 125 முதல் 135 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று நகரத் தொடங்கியுள்ளது. இந்த புயலுக்கு ’ஹாமூன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த புயலானது நாளை வங்க தேசத்தின் கெபுபாரா மற்றும் சிட்டகாங் இடையே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக வங்காள விரிகுடாவின் கடலோர மாநிலமான ஒடிசாவில் கியோஞ்சார், மயூர்பஞ்ச், அங்குல், தேன்கனல், பௌத், கந்தமால், ராயகடா, கோராபுட் மற்றும் மல்கங்கிரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
மேலும் புயல் காரணமாக அக்டோபர் 26 ஆம் தேதி வரை வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஹாமூன் புயல் காரணமாக சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், பாம்பன், தூத்துக்குடி, காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!
ஹெல்த் டிப்ஸ் : பற்களில் உள்ள மஞ்சள் கரையை ஈஸியாக போக்கவேண்டுமா.. இதோ வீட்டு வைத்தியம்!