சென்னையின் மிகப்பெரிய வணிக மையமாக இருப்பது தி.நகர். இங்கு ஜவுளி, நகை,மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க மாம்பலம் ரெயில் நிலையம் வழியாக தினமும் பல லட்சம் பேர் வந்து செல்கின்றனர்.
இங்கு உள்ள ரெங்கநாதன் தெரு , மேட்லி சாலை , உஸ்மான் ரோடு மார்க்கெட் தெரு என அனைத்திலும் திருவிழா கூட்டம் போல் மக்கள் தினமும் அலைமோதி வருகின்றார்கள்.
புறநகர் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தி.நகருக்கு ஏராளமானோர் வருகின்றனர். இந்த நிலையில் பயணிகள், பொதுமக்கள் நெரிசலில் சிக்காமல் செல்ல வசதியாக சென்னை மாநகராட்சி புதிய திட்டம் தீட்டியது.
இதற்காக தி.நகர் ரெயில்நிலையம், பஸ் நிலையத்தை இணைக்கும் வகையில் 1/2 கி.மீட்டர் தூரத்துக்கு பிரமாண்ட பயணிகள் நடை மேம்பாலம் ரூ. 30 கோடி செலவில் அமைக்கும் பணிகள் 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
30 அடி உயரத்தில், 14 அடி அகலத்தில் இரும்பு நடை மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கால் இந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டது . அதன்பின் 2022 ஆம் ஆண்டு இப்பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டன.
தி.நகர் ரெயில் நிலையம் பஸ் நிலையம் இடையே இரும்பு நடை மேம்பாலம் அமைக்கப்பட்டு தற்போது மேற்கூரைக்கான இரும்பு கூண்டு அமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இதில் தி.நகர் ரெயில் நிலையத்தில் பாலம் இணைப்பு பணியும், தி.நகர் பஸ் நிலையத்தில் பயணிகள் இறங்கி செல்லும் படிக்கட்டுகள் பணியும் நிறைவடையாமல் உள்ளன. மேற்கூரை கூண்டுகள் அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.
விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நடை மேம்பாலம் திறக்கப்படும் போது தி.நகரில் ஏற்பட்டு வரும் பெரும் போக்குவரத்து நெரிசல் குறையும்.
அதனால் எப்போது திறப்பார்கள் என்று சென்னை பயணிகள் மட்டுமல்ல, தி.நகரை குறிவைத்து வரும் தமிழகத்தின் பல பகுதி மக்களும் எதிர்பார்த்திருக்கிறார்கள்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
மீனம்பாக்கம் vs பரந்தூர் விமான நிலையத்தின் சிறப்பம்சங்கள் என்ன?