தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும் கவிஞரும் பேராசிரியருமான ஹாஜாகனி வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவை (FeTNA) நியூயார்க் தமிழ்ச்சங்கம் இணைந்து நடத்தும் 35 வது ஆண்டுவிழா மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ளார்.கடந்த சில நாட்களாகவே அமெரிக்காவில் இருக்கும் அவர் அங்கே தனது அனுபவங்களை எல்லாம் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.
இந்த நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த வெள்ளிக் கிழமை ஜும் ஆ தொழுகையை தான் மேற்கொள்வதற்கு உதவிய தனது பள்ளிப்பருவ நண்பர் அமெரிக்காவில் இருக்கும் ஆரூர் சீனிவாசன் பற்றி பதிவிட்டுள்ளார் ஹாஜா கனி.
நேற்று (ஜூலை 8) வெள்ளி காலை அமெரிக்காவின் நாசாவில் இருந்த ஹாஜா கனியை 500 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் டாலஸ் நகர மசூதிக்கு வெள்ளிக் கிழமை தொழுகை நடத்துவதற்காக தனது காரில் வேகமாகவும் பத்திரமாகவும் கொண்டு சேர்த்துள்ளார், ஹாஜா கனியின் பள்ளித் தோழரான திருவாரூரைச் சேர்ந்த சீனிவாசன்.
இதுகுறித்து ஹாஜா கனி தனது சமூக தளப் பக்கத்தில் பகிர்ந்த பகிர்வு மத நல்லிணக்கத்துக்கும், மதங்களைக் கடந்த நட்பின் உறுதிப்பாட்டுக்கு உதாரணமாகவும், மனித நேயத்தை வலியுறுத்தும் மாண்பு மிகுந்த செயல்பாடாகவும் கொண்டாடப்படுகிறது.
அந்தப் பதிவை மின்னம்பலம் வாசகர்களுக்கு வழங்குகிறோம்.
“துல்ஹஜ் மாத வெள்ளிக்கிழமையில் ஜும்ஆ தொழுகையை அமெரிக்காவில் தொழுகிற ஆவல் ஒருபுறம் அதிகம் இருந்தாலும், நாசா புகழ் ஹூஸ்டன் நகரில் காலையில் புறப்பட்டு 500 கி.மீக்கு அப்பால் உள்ள டாலஸ் மாநகரை சாலைவழியே அடைந்திட முடியுமோ என்ற அச்சம் கலந்த ஐயமும் எனக்கு இருந்தது.
என் மனமறிந்த நண்பர் சீனிவாசனின் ஆடி கார் சாலையில் லாவகமாய்ப் பறந்தது. போக்குவரத்து வேகவிதிகளை மீறாமல் மிகுந்த கவனத்தோடும் போக்குவரத்து சிக்கலில் சிக்கிவிடாமல் மதிநுட்பத்தோடும் கார் ஓட்டிவந்து அரைமணிநேரம் முன்னதாகவே டாலஸில் உள்ள (Islamic Association of North Texas INTA) பள்ளிவாசலில் சேர்த்தார். அமெரிக்க தேசத்தில் ஜும்ஆவை நிறைவேற்றும் இனிய வாய்ப்பை இறைவன் அருளினான்” என்று பதிவிட்டுள்ள ஹாஜா கனி அத்தோடு நிறுத்தவில்லை.
“தொழுகை முடிந்து பள்ளியின் ஓரிடத்தில் தமிழ்க்குரல்கள் கேட்க, நாமும் அதில் சங்கமித்தோம்.இலங்கை வானொலி நிகழ்ச்சி முன்னாள் அமைப்பாளர் அஷ்ரஃப்,
சகோ. சலாஹுதீன், டாக்டர் மஃரூஃப் என இலங்கை அன்பர்கள் அறிமுகமாகினர்.
அப்பள்ளிவாசலின் ஜும்ஆ உரையில், ‘அகிலத்தில் அமைதியை நிலைநாட்ட, பகைமைகளை வேரறுக்க, முஸ்லிம்கள் தியாகம் மிக்க வாழ்வை மேற்கொள்ளவேண்டும்” என்று குறிப்பிட்டு
பெருகிவரும் வன்முறைக் கலாச்சாரத்தைக் கண்டித்த அப்பள்ளியின் இமாம் உமர் அப்போது அங்கு வர, அந்தத் தோழர்கள் நம்மை அவருக்கு அறிமுகப்படுத்தினர். அவரது உரைக்கு நாமும் பாராட்டு தெரிவித்தோம்.
ஒரு பெருநிறுவனத்தில் உயர்ந்த பொறுப்பை வகிக்கும் சீனிவாசன் 500 கி.மீ கார் ஓட்டி, தனது பால்ய நண்பரை பள்ளிவாசலுக்கு அழைத்துவந்து தொழுகை முடித்து வரும் வரை நெடுநேரம் காத்திருந்து, மீண்டும் தன் வீட்டுக்குக் கூட்டிவருவதில் இருக்கிறது மானுட மகத்துவம். தமிழ்ப் பண்பாட்டின் தனித்துவம்” என்று குறிப்பிட்டுள்ளார் ஹாஜா கனி,
தமிழ்நாட்டின் இரு நல்லுள்ளங்கள் அமெரிக்காவிலும் தங்களது தகைமையை வெளிப்படுத்தியுள்ளார்கள். மாமன் மச்சானாக பழகிவரும் இந்து முஸ்லிம் இணக்கத்தையும், ஒற்றுமையையும் பறைசாற்றியுள்ளது இந்தப் பதிவு என்று சமூக தளங்களில் கொண்டாடி வருகிறார்கள் மானுட நேசர்கள்.
–வேந்தன்