குட்கா ஊழல் விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, 2 முன்னாள் டிஜிபி உள்ளிட்ட 12 பேரை விசாரிக்க அனுமதி கோரி தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம் எழுதியுள்ளது.
புகையிலை கலந்து தயாரிக்கப்படும் குட்கா, பான் மசாலா போன்ற பாக்கு வடிவிலான போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் தடைசெய்து 2013ஆம் ஆண்டு மே மாதம் தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனாலும் தொடர்ந்து இந்த பொருட்கள் தமிழகத்தில் விற்பனை செய்யப்பட்டு வந்தன.
கடந்த 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் எம்டிஎம் குட்கா தயாரிப்பாளர் மாதவ ராவ் வீடு, செங்குன்றத்தில் உள்ள குட்கா தயாரிப்பு ஆலைகள் மற்றும் சேமிப்புக் கிடங்குகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அங்கு 250 கோடி ரூபாய்க்கும் மேல் வரி ஏய்ப்பு நடந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் குட்காவை சட்டவிரோதமாக விற்பனை செய்ய முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் போலீஸ் அதிகாரிகள் மற்றும் இதர அதிகாரிகள் இரண்டு ஆண்டுகளில் ரூ.39.91 கோடி லஞ்சம் பெற்றதாக டைரி ஒன்றும் சிக்கியது.
இதனையடுத்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் கூறி வருமான வரித்துறை தமிழக அரசுக்கு கடிதம் எழுதியது. இந்தக் கடிதம் 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஊடகங்களில் கசிந்தது. ஆனால், அம்மாதிரி கடிதம் ஏதும் வருமான வரித்துறை எழுதவில்லை என்று தமிழக அரசு மறுப்புத் தெரிவித்தது. அதேசமயத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லமான வேதா நிலையத்தில் 2017 நவம்பரில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. சசிகலாவின் அறையில் சோதனை நடத்தப்பட்டதில் அங்கு வருமான வரித்துறையின் முதன்மை இயக்குனர் 2016 ஆகஸ்ட் மாதம் எழுதிய ரகசியக் கடிதமும் ஒன்று கிடைத்ததாக வருமான வரித்துறை கூறியிருந்தது.

2017ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சட்டவிரோதமாக குட்கா விற்பனை செய்ய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது. அதன்படி அவரது வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. குட்கா வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி திமுக தொடர்ந்த வழக்கில் 2018 ஏப்ரல் 26ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம் சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை மற்றும் சுங்கத்துறையைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள் உட்பட 6 பேர் மீது 2018 நவம்பரில் முதல் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது. சிபிஐ தவிர, அமலாக்க இயக்குனரகம் குட்கா ஊழல் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, குற்றம் சாட்டப்பட்ட சிலருக்குச் சொந்தமான இடங்களில் 246 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை தற்காலிகமாக பறிமுதல் செய்தது.
இந்தசூழலில் குட்கா வழக்கில் தொடர்புடைய முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் வணிகவரித் துறை அமைச்சர் பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபி டி.கே. ராஜேந்திரன் மற்றும் சென்னை மாநகரத்தின் முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரி தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம் அனுப்பியுள்ளது. முன்னாள் அமைச்சர்கள், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய மாநில அரசின் அனுமதி தேவை என்பதால் சிபிஐ தற்போது கடிதம் அனுப்பியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா