குட்கா முறைகேடு வழக்கு: சிபிஐக்கு கூடுதல் அவகாசம்!

தமிழகம்

குட்கா முறைகேடு வழக்கில், கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐக்கு மேலும் கால அவகாசம் வழங்கி சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது, செங்குன்றம் பகுதியில் மாதவ ராவ் என்பவருக்கு சொந்தமான குட்கா கிடங்கில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியபோது, முக்கிய பிரமுகர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக ஒரு டைரியை பறிமுதல் செய்தனர்.

அதில் கிடைத்த தகவலின்படி, அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் போலீஸ் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ் மற்றும் ஒன்றிய, மாநில அரசு உயரதிகாரிகள், போலீஸ் உயரதிகாரிகளின் பெயர்களும் இருந்தன.

இந்த குட்கா ஊழல் தொடர்பாக திமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சிபிஐ அதிகாரிகள் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், கைது செய்யப்பட்டுள்ள மாதவ ராவ் உள்ளிட்ட 6 பெயர்கள் மட்டுமே உள்ளன.

அமைச்சர் மற்றும் டிஜிபி என்று வேறு யாருடைய பெயர்களும் அந்த குற்றப்பத்திரிகையில் இடம்பெறவில்லை. இதனிடையே முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழக அரசு கடந்த ஜூலை 19ம் தேதி அனுமதி வழங்கியது.

இதைத்தொடர்ந்து, இந்த வழக்கு கடந்த முறை சென்னை சிபிஐ நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ தரப்பில் 11 பேருக்கு எதிராக கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

அந்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் பல்வேறு தவறுகள் இருந்ததால் அதனை திருத்தம் செய்து சாட்சிகள் குறித்த விபரங்கள் மற்றும் அவர்களின் வாக்குமூலம் குறித்த விவரங்களை இணைத்து தாக்கல் செய்ய விசாரணை அதிகாரிக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் இவ்வழக்கு இன்று (டிசம்பர் 15) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுவரை 7 பேருக்கு எதிராக மட்டுமே வழக்கை நடத்த மத்திய அரசிடம் இருந்தும் மாநில அரசிடம் இருந்தும் அனுமதி பெற்றதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிகையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பிழைகளை முழுவதுமாக திருத்தி தாக்கல் செய்ய வேண்டும் எனவும் யார், யாருக்கு எதிராக வழக்கு தொடர ஒப்புதல் கிடைத்துள்ளது என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 10ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இதனிடையே இந்த வழக்கிற்கு தொடர்பில்லாமல் முடக்கப்பட்ட அசையா சொத்துக்களை விடுவிக்க வேண்டும் என குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. வழக்கின் திருத்தப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்யாததால், சொத்துக்களை விடுவிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ஜெ.பிரகாஷ்

பழங்குடியினர் பட்டியலில் குருவிக்காரர்: மக்களவையில் நிறைவேறிய மசோதா!

இசை எதுவானாலும் தமிழிற்கு முன்னுரிமை கொடுங்கள்: மு.க.ஸ்டாலின்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *