குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ரத்து செய்த உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச்சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் குட்கா பான் மசாலா, சுவையூட்டப்பட்ட புகையிலைப் பொருட்களுக்குத் தடை விதித்து உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை மீறும் சில நிறுவனங்களுக்கு எதிராகக் குற்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. தடையை மீறியதாக ஒரு நிறுவனத்துக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்தும் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் மேல் முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்குகள் அனைத்தும் ஜனவரி 25 ஆம் தேதி உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன் மற்றும் குமரேஷ் பாபு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு உணவுப் பாதுகாப்புத்துறை ஆணையர் பிறப்பித்த தடை உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
இதை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் வலியுறுத்தியிருந்தார்கள். இந்நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், ”குட்கா மற்றும் பான் மசாலா மீதான தடையை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
மோனிஷா
திருமண வாழ்வில் அடியெடுத்து வைத்த இந்திய ஆல்ரவுண்டர்!
எல்.ஜி.எம் : சினிமாவிலும் சிக்ஸர் அடிப்பாரா தோனி?