குட்காவுக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இன்று (பிப்ரவரி 8) தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச்சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் குட்கா பான் மசாலா, சுவையூட்டப்பட்ட புகையிலைப் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.
இந்த தடையை ரத்து செய்து கடந்த ஜனவரி 25ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தின.
அதன்படி சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.
அதன்படி இன்று தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. அந்த மனுவில், “மக்களுக்குக் குறிப்பாக இளைஞர்களுக்கு குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களால் அதிக பாதிப்பு ஏற்படுகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு தான் உணவு பாதுகாப்பு தரச் சட்டத்தின் படி தமிழக அரசு தடை விதித்தது. ஆனால் சென்னை உயர் நீதிமன்றம் தடையை ரத்து செய்திருக்கிறது. மக்களின் நலனை கருத்தில் கொண்டு குட்கா பொருட்களுக்குத் தடை விதிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பிரியா
உற்சாகத்தில் ரசிகர்கள்: வெளியானது ’வாத்தி’ ட்ரெய்லர்!
இரட்டைக் கன்றுகளை ஈன்ற நாட்டுப் பசு: அரியலூரில் அரிய நிகழ்வு!