குட்கா தடை சட்டம் ரத்து உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் இன்று (மார்ச் 3) மறுப்பு தெரிவித்தது.
2006ஆம் ஆண்டு இயற்றப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ் குட்கா, பான் மசாலா மற்றும் சுவையூட்டப்பட்ட புகையிலை பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.
இந்த தடையை கடந்த ஜனவரி 25ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு ரத்து செய்தது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அந்த மனுவில் “மக்களுக்குக் குறிப்பாக இளைஞர்களுக்கு குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களால் அதிக பாதிப்பு ஏற்படுகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு தான் உணவு பாதுகாப்பு தரச் சட்டத்தின் படி தமிழக அரசு தடை விதித்தது. ஆனால் சென்னை உயர் நீதிமன்றம் தடையை ரத்து செய்திருக்கிறது. மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு குட்கா பொருட்களுக்குத் தடை விதிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று (மார்ச் 3) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.எம்.ஜோசப், பி.வி.நாகரத்னா அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த வழக்குத் தொடர்பாக வரும் 20ஆம் தேதிக்குள் குட்கா பான் மசாலா நிறுவனங்கள் பதிலளிக்க வேண்டும் என்று கூறி அன்றைய தினத்துக்கு வழக்கை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். அதுபோன்று இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
பிரியா
காலநிலை அறிவு இயக்கம்: முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!
5 மொழிகளில் ‘டிடெக்டிவ் தீக்ஷனா’!