சொத்து வழிகாட்டு மதிப்பீட்டை மாற்றி அமைத்து கடந்த ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட சுற்றறிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. Guideline assessment of property
தமிழகத்தில் சொத்துக்களுக்கான வழிகாட்டு மதிப்பை நிர்ணயிக்க பத்திரப்பதிவுத் துறை தலைவர் தலைமையில் மதிப்பீட்டுக் குழு செயல்பட்டு வருகிறது.
2023-24ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் உரையில், சொத்துக்களின் விலை அதிகரித்துள்ளதால் வழிகாட்டு மதிப்பீட்டை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும், மதிப்பீட்டுக் குழு வழிகாட்டு மதிப்பீட்டை நிர்ணயிக்க கால அவகாசம் எடுத்துக்கொள்ளும் என்பதால்,
தற்காலிக நடவடிக்கையாக 2017ஆம் ஆண்டு ஜூன் 8ஆம் தேதி வரை அமலில் இருந்த வழிகாட்டு மதிப்பீடு அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதனையடுத்து கடந்த மார்ச் 30 ஆம் தேதி தமிழக அரசு சுற்றறிக்கையை வெளியிட்டது. அதில் ஏப்ரல் 1 2023 முதல் 2017-ல் அமலில் இருந்த வழிகாட்டு மதிப்பீட்டின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட புதிய வழிகாட்டு மதிப்பீடு அமலுக்கு வரும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
தமிழக அரசின் இந்த சுற்றறிக்கையை எதிர்த்து கிரடாய் மற்றும் 3 கட்டுமான நிறுவனங்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
அதில், ”சட்டவிதிகளின்படி எந்த கலந்தாலோசனையும் நடத்தாமல், பொதுமக்களின் கருத்துகளை கேட்காமல் வழிகாட்டு மதிப்பீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தற்காலிக ஏற்பாடாக தெரியவில்லை. 50 சதவீதம் வரை வழிகாட்டு மதிப்பீடு உயர்த்தப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்து வந்த உயர்நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன் இன்று (ஜனவரி 4) தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில், “வழிகாட்டு மதிப்பீட்டை திருத்தி அமைக்க அரசுக்கு முழு அதிகாரம் இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஆனால், விதிகளின்படி துணைக் குழுக்கள் அமைத்து, அறிக்கைகள் பெற்று, அவற்றை ஆய்வுசெய்து, பொதுமக்கள் கருத்துகளைப் பெற்று அதன்பிறகே வழிகாட்டு மதிப்பை நிர்ணயிக்க முடியும்
இதில் சட்ட விதிமுறைகள் பின்பற்றப்படாததால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கை, இயற்கை நீதியை மீறும் வகையில் உள்ளது” என்று தமிழக அரசின் சுற்றறிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும் விதிகளைப் பின்பற்றி வழிகாட்டு மதிப்பை நிர்ணயிக்க வேண்டும் என்றும் அதுவரை 2017 மதிப்பீட்டைப் பின்பற்ற வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
வெள்ள நிவாரணம் எங்க கிடைக்குது?: நிர்மலாவிடம் கேள்வி கேட்ட பெண்!
ஒரே நாளில் பிரதமர் மோடி, ராகுலை சந்தித்த உதயநிதி : டெல்லியில் நடந்தது என்ன?
Guideline assessment of property