Vasantha Bhavan Ravi

இட்லி, தோசை, பொங்கல் விலை உயர காரணம்: ‘வசந்த பவன்’ ரவி

தமிழகம்

அரிசி மீது ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதால் ஹோட்டல்களில் சாப்பிடக்கூடிய இட்லி, தோசை, பொங்கல் உள்ளிட்ட உணவு வகைகளின் விலை 5 சதவிகிதம் உயர காரணமாகிவிட்டது என்று சென்னை மாவட்ட ஹோட்டல்கள் சங்கத் தலைவர் ‘வசந்த பவன்’ ரவி கூறியுள்ளார்.
மக்கள் அன்றாடம் சாப்பிடக்கூடிய பொருட்கள் மீதும் மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விதித்து வருகிறது. இதுவரையில் வரி விதிக்கப்படாமல் இருந்த அரிசி, தயிர் போன்ற உணவு பொருட்கள் மீது தற்போது ஜிஎஸ்டி விதிக்கப்பட்டதால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் நடந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி விவசாயிகள் உற்பத்தி செய்து தருகின்ற அரிசி புதிதாக ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரப்பட்டதால் அரிசி ஆலை மற்றும் வியாபாரிகள் கடை  அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அரிசி மீதான வரியை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனாலும் அரிசி மீதான ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்தது.
இந்த நிலையில் அரிசி மீது ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டதால் ஹோட்டல்களில் சாப்பிடக்கூடிய அரிசியிலான உணவுகளான இட்லி, தோசை, பொங்கல், ஆனியன் ஊத்தப்பம் போன்ற உணவு பண்டங்களின் விலையை உயர்த்த வேண்டிய நிலை உள்ளது என்று சென்னை மாவட்ட ஹோட்டல்கள் சங்க தலைவர் ‘வசந்த பவன்’ ரவி கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், “அரிசிக்கு 5 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டதால் உணவு பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஹோட்டல் உணவு பொருட்களுக்கு மட்டும்தான் இரட்டை வரி விதிக்கப்படுகிறது. ஏற்கனவே ஹோட்டல் உணவு பண்டங்களுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது.
அரிசியில் இருந்துதான் இட்லி, தோசை வகைகள், பொங்கல் போன்றவை தயாரிக்கப்படுகிறது. இவை உட்பட டீ, காபி, வடை, பூரி, சப்பாத்தி மற்றும் அசைவ உணவுகள் அனைத்துக்கும் 5 சதவிகிதம் வரி விதிக்கப்படுகிறது. அப்படி இருக்கும்போது அரிசிக்கு தனியாக ஜிஎஸ்டி வரி தற்போது விதிக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களைதான் பாதிக்கும். எந்த வரி விதித்தாலும் அந்த வரி சுமை இறுதியில் பொதுமக்களின் தலையில்தான் விழுகிறது. இதனால் ஹோட்டல் தொழில் மேலும் பாதிக்கப்படும்.
ஏற்கனவே ஹோட்டல்களில் விலை உயர்வால் வியாபாரம் குறைந்துள்ளது. கியாஸ், பால், மளிகை பொருட்கள், சொத்து வரி உயர்வால் வாடகை அதிகரிப்பு போன்றவற்றால் இந்தத் தொழில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அரிசிக்கு ஜிஎஸ்டி வரி விதித்து இருப்பது இத்தொழிலை மேலும் நசுக்குவதாக அமைந்துள்ளது.
உயர்த்தப்பட்ட 5 சதவிகித வரியால் இட்லி, தோசை, பொங்கல் உள்ளிட்ட உணவு வகைளின் விலை 5 சதவிகிதம் உயரும். ஏற்கெனவே ஹோட்டல் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு நடத்த முடியாமல் பலர் வெளியேறி விட்டனர். இந்த நிலையில் தொடர்ந்து ஹோட்டல் தொழில் மீது வரி விதிப்பதால் உரிமையாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். எனவே அரிசி மீது விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும். ஒரு பொருளுக்கு பல வடிவில் வரி விதிப்பது முறையா?” என்றும் கூறியுள்ளார்.

-ராஜ்

+1
2
+1
1
+1
2
+1
23
+1
3
+1
1
+1
8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *