கேரளாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் மீசையுடன் வலம் வருகிறார். தன் மீசையைப் பெருமைப்படுத்துவதற்காகவே மீசைக்காரி என்ற முகநூல் பக்கத்தையும் அவர் உருவாக்கி இருக்கிறார்.
எந்த விஷயத்தையும் ஏற்றுக்கொள்ளும்போது அது இனிமையாகத்தான் இருக்கும் என்பதற்கு உதாரணம், கேரளாவைச் சேர்ந்த மீசைக்காரியான ஷைஜா. கண்ணூர் மாவட்டம் குத்துபரம்பு சோலையாடு பகுதியைச் சேர்ந்த ஷைஜா, தனக்கு மீசை வளர்ந்ததை பெருமையாகக் கருதுகிறார். பொதுவாக, ஆண்களுக்குத்தான் மீசை இருக்கும். அது, அவர்களின் அடையாளமாகவும், கம்பீரமாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால், பெண்களுக்கு முளைக்கும் மீசையானது ஹார்மோன் பிரச்சினையால் உருவாகிறது.
அந்த மீசை பெண்களுக்கு வளரும்போது, மற்றவர்கள் அவர்களை விநோதமாகத்தான் பார்ப்பார்கள். அப்படி, லேசாக வளரும் மீசையைக்கூட, தன் முகத்துக்கு அருவறுப்பு தருவதாகக் கருதி, அதை உடனே பெண்கள் அகற்றிவிடுவார்கள். ஆனால், இதில் வித்தியாசமானவராக இருக்கிறார், ஷைஜா. கோயில், பள்ளிக்கூடம், விழா என எதுவாக இருந்தாலும் எல்லா இடங்களிலும் தன் மீசையுடனேயே வலம்வருகிறார். தன் மீசையைப் பெருமைப்படுத்துவதற்காகவே மீசைக்காரி என்ற முகநூல் பக்கத்தையும் உருவாக்கி, மீசை குறித்த பதிவுகளையும் படங்களையும் அதில் பதிவிட்டு வருகிறார்.
பாலக்காட்டைச் சேர்ந்த லட்சுமணனை திருமணம் செய்த ஷைஜா, குழந்தை, குடும்பம் சகிதமாய் வாழ்ந்துவருகிறார். குடும்பத்தின் மீது ஒருபுறம் காதல் கொண்டிருக்க, மறுபுறம் தன் மீசை மீது அளவற்ற காதல் கொண்டிருக்கிறார். தன் மனைவி மீசை மீது கொண்டிருக்கும் காதலால், அவருடைய கணவரும் ‘நீ மீசை வளர்ப்பது எனக்கு சந்தோசம்தான், நான் அதற்கு தடையாக இருக்கமாட்டேன்’ எனக் கூறியுள்ளார்.
மீசையுடன் தோன்றும் புகைப்படங்களை முகநூலில் வெளியிட்டு, ‘இதைவிட வேறு என்ன தெரிய வேண்டும்’ எனக் கேட்கும் ஷைஜாவுக்கு, பலரும் ஆதரவு தந்துள்ளனர். அதேநேரத்தில் சிலர், கிண்டலான பதிவுகளையும் பதிவிட்டுள்ளனர். அவற்றுக்குச் சரியான பதிலடிகளைத் தரும் ஷைஜா, ‘என் மீசை குறித்து எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் என் மீசை அங்குதான் இருக்கும். அது இருப்பதால் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை’ என்கிறார்.
’என்னுடைய இளமைப் பருவத்தில் அரும்பு மீசை முளைத்தது. அதன்பிற்கு கொஞ்சம் பெரிதாக வளர்ந்தது. அன்றுமுதல் இன்றுவரை நான் என் மீசையை எடுக்க வேண்டும் என நினைத்ததே இல்லை. ஊரில் எல்லாரும் என்னை மீசைக்காரி என்று கூப்பிடுவார்கள். மீசை இருப்பதால்தானே அப்படி என்னைக் கூப்பிடுகிறார்கள். இது எனக்கு பெருமையாக இருக்கிறது. இதனால்தான் மீசைக்காரி என்ற பெயரில் முகநூல் பக்கத்தை ஆரம்பித்து என்னைப் பற்றிய முழு விவரங்களையும் அதில் பதிவாகப் போட்டிருக்கிறேன்’ என்றும் கூறுகிறார்.
’என் மீசை வளர்ப்புக்கு என் கணவரும், என் குடும்பத்தினரும் எனக்கு நல்ல ஆதரவு தருகின்றனர்’ என்று சொல்லும் அவர், ’என் மீசையை நான் மிகவும் நேசிக்கிறேன். இதற்கு என்ன கொடுத்தாலும் அதை நான் இழக்க தயாரில்லை. மற்றவர்கள் சொல்லும் கிண்டலையும் நான் பொருட்படுத்தப் போறதில்லை. என்னை எல்லோரும் ஒருமாதிரியாகப் பார்ப்பார்கள். ஆனால் அதை நான் கண்டுகொள்ளாமல் செல்வேன்’ என்கிறார், துணிச்சலுடன்.
ஒருமுறை அவரின் கர்ப்பப்பையை அகற்ற அறுவைச்சிகிச்சை நடந்ததாம். அப்போது மருத்துவர், ’இத்துடன் சேர்த்து உங்களின் மீசையையும் அகற்றிவிடவா’ என விளையாட்டாகக் கேட்டாராம். அதற்கு ஷைஜா, ’எனக்கு ஆபரேசன் முடிந்து கண் திறந்து பார்க்கிறபோது மீசை இல்லாமல் இருந்தால் நான் தூக்குப் போட்டு செத்திடுவேன்’ என்று பதில் சொன்னாராம். இப்படி, மீசைமீது தீவிரமாய்க் காதல் கொண்டிருக்கும் மீசைக்காரியான ஷைஜா எல்லோருக்கும் சொல்வது ஒன்றே ஒன்றைத்தான். ’என் மீசையைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். அது உங்களை எந்தவிதத்திலும் தொந்தரவு செய்யாது’.
மீசைக்காரியின் பதிவுகளும் படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாவதைத் தொடர்ந்து அவரை பேட்டி எடுப்பதற்காக அவர் வீட்டு வாசலில் கேரள பத்திரிகைகள் எல்லாம் வரிசை கட்டி நிற்கின்றனவாம். இது ஒருபுறமிருக்க, மறுபுறம் மஞ்சுவாரியரை வைத்து படம் இயக்கிய பிரபல இயக்குநர் பேண்டோம் பிரவீன், மீசைக்காரியின் வாழ்க்கையைப் படமாக எடுக்கவும் அணுகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
ஜெ.பிரகாஷ்