குரூப் 4 பணியிடங்கள் மேலும் அதிகரிப்பு : தமிழக அரசு!

தமிழகம்

கடந்த மூன்று ஆண்டுகளில் அரசு துறையில் 68,039, தனியார் துறையில் 5,08,055 வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் இளைஞர்களுக்கான முக்கிய அறிவிப்பாக அரசு துறைகள் மற்றும் கல்வி நிலையங்களில் 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும், புதிதாக 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று கூறியிருந்தது.

இந்தநிலையில் ஆட்சிக்கு வந்த பிறகு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியதுடன் முதல்வர் ஸ்டாலின் ஜப்பான், துபாய், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குச் சென்று வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் முதலீடுகளை ஈர்த்து வந்தார்.

இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் வெள்ளை அறிக்கை கேட்டன.

சமீபத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை நடத்தியது. 6724 பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட தேர்வில் 5.8 லட்சம் தேர்வர்கள் தேர்வு எழுதினர்.

இதனால் குரூப் 4 தேர்வு பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி, ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.

இந்தநிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம். சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம். மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட தேர்வு முகமைகள் வாயிலாக 34,384 நபர்களுக்கும். பல்வேறு அரசுத்துறைகளில் நேரடி நியமனம். உள்ளாட்சி அமைப்புகள், அரசுத் துறை நிறுவனங்கள் என பல்வேறு அமைப்புகளின் வாயிலாக 33,655 நபர்களுக்கும் என மொத்தம் 68,039 நபர்களுக்குப் பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இன்று (செப்டம்பர் 20) வெளியிடப்பட்ட தமிழக அரசின் இந்த அறிவிப்பில், “கடந்த சுதந்திர தின விழா உரையின்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்திருந்தவாறு அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 75,000 இளைஞர்களை பல்வேறு அரசு துறைகளில் பணி நியமனம் செய்ய சம்பந்தப்பட்ட அமைப்புகள், அரசுத் துறைகள் வாயிலாக ஆயத்தப் பணிகள் செவ்வனே நடை பெற்று வருகின்றன.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திவரும் தொகுதி 1 தேர்வைப் பொறுத்தவரையில், ஒவ்வொரு துறையும் தங்களது காலிப் பணியிடங்களை நேரடியாகத் தெரிவித்து தேவையான பணியாளர்களை பெற்று வருகிறது.
தேர்வாணையம் வெளியிடும் தேர்வு அறிவிக்கையில் தெரிவிக்கப்படும் காலி பணியிடங்கள் மாறுதலுக்கு உட்பட்டது.

கடந்த மூன்று முறை நடத்தப்பட்ட தொகுதி 4 தேர்வுகளை ஒப்பிடுகையில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்கள் முறையே 9351, 6491 மற்றும் 7301, தேர்வுகள் நிறைவு பெற்று பணியிடங்கள் நிரப்பப்படுகையில் 11949, 9684 10139 என அதிகரிக்கப்பட்டுள்ளன.

நடப்பாண்டை பொறுத்தவரையில் 6244 அறிவிக்கப்பட்டிருந்த காலிப்பணியிடங்கள் தற்பொழுது 6724 அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை, பணியிடங்கள் நிரப்பப்படும் வரை மேலும் அதிகரிக்கும்.

இது மட்டுமல்லாமல் பல்வேறு அரசு துறைகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தேர்வாணையம் போன்ற அமைப்புகளின் வாயிலாக இரண்டு ஆண்டுகளுக்குள் மேலும் 75,000 இளைஞர்கள் அரசு பணிகளில் அமர்த்தப்படுவார்கள்.
அரசுத் துறைகளில் மட்டுமல்லாது.கடந்த மூன்று ஆண்டுகளில் அரசின் முயற்சியால் 5,08,055 தமிழ்நாட்டு இளைஞர்களுக்கும் படித்த தகுதி வாய்ந்த இளைஞர்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பினைப் பெற்று தரும் பணியினை தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேற்கொள்ளும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

பழனி பஞ்சாமிர்தத்தில் மாட்டுக்கொழுப்பு? : தமிழக அரசு விளக்கம்!

திருப்பதி லட்டு சர்ச்சை: திண்டுக்கல் நெய் நிறுவனத்தில் சோதனை!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0