கள்ளக்குறிச்சி, கலவரத்தில் ஈடுபடாத இளைஞர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளை கண்மூடித்தனமாக போலீசார் கைது செய்ததாக அவர்களது பெற்றோர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
கள்ளக்குறிச்சியில், கடந்த ஜூலை 13 அன்று தனியார் பள்ளி மாணவியான ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்ததாக மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டம் ஜூலை 17 அன்று கலவரமாக வெடித்தது.
கலவரத்தின் போது பள்ளியின் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டது. போலீஸ் வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. இதனால் கலவரத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோரை போலீசார் கைது செய்தனர்.
தேர்வர்கள் கைது
சேலம் டவுன் பஞ்சாயத்தை சேர்ந்த துப்புரவு பணியாளர் என்.செல்வராஜ் மற்றும் அவரது மனைவி எஸ்.மல்லிகா இருவரும் கள்ளக்குறிச்சி சக்தி பள்ளிக்கு அருகே காந்தி நகரில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குடியரசு, வசந்த் ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.
எஸ். குடியரசு கணித பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். எஸ். வசந்த் பி.டெக் பட்டதாரி. இவர்கள் இருவரும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு தயாராகி வந்தனர். இந்நிலையில், இருவரும் கலவரத்தின் போது போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
பெற்றோரின் வேதனை
மகன்களது கைது குறித்து தந்தை செல்வராஜ் தி இந்துவிடம் கூறுகையில், “ எனது இரு மகன்களும் குரூப் 4 தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தார்கள். கலவரம் நடந்த அன்று கள்ளக்குறிச்சியில் உள்ள ஐஏஎஸ் பயிற்சி அகாடமியில் மாதிரி தேர்வில் கலந்து கொண்டனர். தேர்விற்கு பிறகு உறவினர் வீட்டில் மதிய உணவை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது போலீஸ் குழுவினர் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
அவர்கள் ஐஏஎஸ் பயிற்சி அகாடமியில் இருந்து திரும்பி வருவதாகவும் ஜூலை 24 அன்று நடைபெறவிருக்கும் குரூப் 4 தேர்வுக்கு ஹால் டிக்கெட்டுகளை டவுன்லோடு செய்து வருவதாகவும் விளக்கம் அளித்தனர். ஆனால், அவர்களது போன்களை கைப்பற்றி ஹால் டிக்கெட்டுகளையும் கிழித்து எறிந்து விட்டு அவர்களை கைது செய்தனர்.
அகாடமியில் பயிற்சி வகுப்புக்கு சென்றவர்கள் எப்படி கலவரத்தில் ஈடுபட்டிருக்க முடியும். அவர்கள் காலை 10.17 மணியளவில் அகாடமிக்குள் நுழைந்து பிற்பகல் 1.13 மணியளவில் (கிட்டத்தட்ட கலவரம் முடிவுக்கு வந்தது) வெளியேறிய சிசிடிவி காட்சிகளையும் மாவட்ட ஆட்சியர் சரவணகுமார் ஜதாவத்திடம் சமர்ப்பித்திருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட குரூப் 4 தேர்வர்
இதனை தொடர்ந்து குரூப் 4 தேர்வுக்கு தயாராகி வந்த கே. சிவன் என்பவரும் கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்டார். இவர் சமூகப்பணியில் எம்.எஸ்சி முடித்துள்ளார். இவரது தந்தை கேசவன் கேரளாவில் கூலித் தொழிலாளியாக உள்ளார். இவர், தனது மகன் குரூப் 4 தேர்வுக்கு இரண்டு ஆண்டுகளாக தயாராகி வருவதாகவும், படிப்பதற்குத் தேவையான பொருட்களை நண்பரிடம் இருந்து வாங்கிக் கொண்டு வரும் போது தடுத்து நிறுத்தி போலீசாரால் கைது செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும் அவர், கட்டாயப்படுத்தி கைது செய்து 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு இழுத்து சென்று, நீ விடுதலை சிறுத்தை கட்சியைச் சேர்ந்தவரா, பெரியார் திராவிடக் கழகத்தை சேர்ந்தவரா? என்று விசாரித்ததாக தனது மகன் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கூறுகையில், இந்த வழக்கில் அப்பாவிகள் பலர் சிக்கியுள்ளனர். போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி காட்சிகளை பரிசோதித்து கலவரத்தில் ஈடுபடாதவர்களை விடுவிக்க ஏற்பாடுகளை செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.
மோனிஷா
வெற்றி பெற்றது மனைவி: பதவி ஏற்றது கணவன் : பஞ்சாயத்து செயலாளர் சஸ்பெண்ட்!