வினாத்தாள் அச்சடிக்கும் இடத்தில் ஏற்பட்ட தவறு தான் குரூப் 2 தேர்வு குளறுபடிகளுக்கான காரணம் என்று டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி சார் பதிவாளர் உள்ளிட்ட பதவியிடங்களுக்காக நடைபெற்ற குரூப் 2, குரூப் 2 ஏ மெயின் தேர்வு நடைபெற்றது. 5,446 பணியிடங்களுக்கு 55,071 பேர் பேர் தேர்வு எழுதினார்கள்.
காலையில் நடைபெற்ற தமிழ் மொழித்தாள் தேர்வில் வினாத்தாள் பதிவெண் மாறியிருந்ததால் பல தேர்வு மையங்களில் குழப்பம் ஏற்பட்டது. வினாத்தாள் திரும்ப பெறப்பட்டு பதிவெண் மீண்டும் சரிசெய்யப்பட்டு கூடுதல் நேரத்துடன் தேர்வு நடத்தப்பட்டது.
இதனால் குரூப் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் தெரிவித்திருந்தனர்.
இந்தநிலையில், டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரி ஐஏஎஸ் தலைமையில் டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் குரூப் 2 தேர்வு குளறுபடிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
வினாத்தாள் அச்சடிக்கும் இடத்தில் ஏற்பட்ட தவறு தான் இந்த குளறுபடிகளுக்கு காரணம். தேர்வர்களுக்குரிய பதிவெண்ணுடன் வினாத்தாள் சரியாக அடுக்கப்படாமல் விடப்பட்டுள்ளது.
வினாத்தாள் அச்சடிக்க ஒப்பந்தம் எடுத்த நிறுவனம், தாங்கள் செய்ய வேண்டிய பணிகளை அவுட்சோர்சிங் விட்டது முதன்மையான காரணம் என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
செல்வம்
மார்ச் 9 ல் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்!
அதிமுக கட்சி விதி திருத்தம்: தேர்தல் ஆணையத்தில் மனுத்தாக்கல்!
ஈரோடு கிழக்கு: மூன்று மணி நிலவரம்… எவ்வளவு வாக்குகள் பதிவாகியுள்ளன?