டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதன்மை தேர்வு தொடங்குவதற்கு சில இடங்களில் தாமதம் ஏற்பட்டதால் கூடுதல் நேரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 186 தேர்வு மையங்களில் இன்று (பிப்ரவரி 25) டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதன்மை தேர்வு நடைபெறுகிறது.
முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற 51,071 பேர் இன்று நடைபெறும் முதன்மை தேர்வை எழுதுகின்றனர். சென்னையில் மட்டும் 8,315 பேர் இன்று தேர்வு எழுதுகின்றனர். இதற்காக 32 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
காலை 9.30 மணி முதல் 12.30 வரை வரை தமிழ் மொழி தகுதித்தாள் தேர்வும் மதியம் 2 முதல் 5 மணி வரை பொதுத் தேர்வும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் சென்னையில் சில இடங்களில் முதன்மை தேர்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
காலை 9.30 மணிக்குத் தொடங்க வேண்டிய தேர்வு 10 மணியாகியும் தொடங்கவில்லை என்று சென்னை துரைப்பாக்கத்தில் இருக்கும் தேர்வு மையத்தில் இருந்து புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம், தமிழகம் முழுவதும் எந்தெந்த தேர்வு மையங்களில் தேர்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்ற தகவல் சேகரிக்கப்பட்டுள்ளன.
மேலும் தேர்வு தொடங்குவதற்கான நடவடிக்கையும் விரைந்து எடுக்கவும் தேர்வு மைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தேர்வு தொடங்குவதற்குத் தாமதமான மையங்களில், எவ்வளவு நேரம் தாமதம் ஏற்பட்டுள்ளது என்பதைக் கவனித்து தேர்வர்களுக்குக் கூடுதல் நேரம் கொடுக்க உத்தரவிட்டுள்ளதாகவும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதனால் தேர்வர்கள் பதட்டமின்றி தேர்வு எழுத அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
மோனிஷா
இறுதிகட்டத்தில் இடைத்தேர்தல் : மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!
வீதிவீதியாக இறுதிகட்ட பிரச்சாரம் : முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயண விபரம்!