குரூப் 1 தேர்வில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணையை ரத்து செய்ய முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2016ல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குருப் 1 தேர்வில் முறைகேடு நடந்தது வெளிச்சத்துக்கு வந்தது. அப்போது தேர்வெழுதிய ராம்குமார் தேர்வில் தேர்ச்சி பெற விடைத்தாளை மாற்றி வைத்து முறைகேடு செய்ததாக கைது செய்யப்பட்டார். அவருக்கு உதவியதாக மேலும் சிலர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பான வழக்கு சென்னை ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, ராம்குமாரிடம் வேலைபார்த்த கருணாநிதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அதில், “விடைத்தாள் மாற்றி வைத்த விவகாரத்தில் நான் ஈடுபடவில்லை. முறையாக விசாரணை நடத்தாமல் ராம்குமாரிடம் வேலை பார்த்த என் மீது வழக்குப்போடப்பட்டுள்ளது. இதுதொடர்பான கீழமை நீதிமன்றத்தின் வழக்கு விசாரணையை ரத்து செய்ய வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சேஷசாயி முன் இன்று (ஆகஸ்ட் 30) விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு குற்றவியல் வழக்கறிஞர் சி.இ.பிரதாப் ஆஜரானார்.
அவர், “2016 குரூப் 1 மோசடி வழக்கில், 65 சாட்சிகள் சேர்க்கப்பட்டு 10 பேரிடம் சாட்சி விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை ரத்து செய்ய கோரிய மனுவை ஏற்க கூடாது” என்று வாதாடினார்.
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி சேஷசாயி , குரூப் 1 தேர்வு முறைகேடு வழக்கை 6 மாதத்தில் விசாரித்து முடிக்க ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவு பிறப்பித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
மதுரையில் தீக்குளித்த திமுக நிர்வாகி மரணம்: அதிர வைக்கும் கடிதம்!
திருச்சி என்.ஐ.டி மாணவிக்கு பாலியல் தொல்லை.. மாணவர்கள் போராட்டம் வாபஸ்… நடந்தது என்ன ?