டிபன் என்றாலே பல வீடுகளில் இட்லியும் தோசையும் மட்டும்தான். இதைத் தவிரவும் ஏராளமான ரெசிப்பிகள் இருக்கின்றன. அதற்கு உதாரணம் கார்போஹைட்ரேட் நிறைந்த இந்த பட்டாணி – அவல் உப்புமா. அவல், பட்டாணி, உருளைக்கிழங்கில் மாவுச்சத்தும் புரதச்சத்தும் கிடைக்கின்றன. குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் சாப்பிட ஏற்ற உணவு இது. சர்க்கரை நோயாளிகள் மற்றும் உடல் பருமன் உள்ளவர்கள் அளவாக, எப்போதாவது சாப்பிடலாம்.
என்ன தேவை?
அவல் – ஒரு கப்
பச்சைப்பட்டாணி – 2 டேபிள்ஸ்பூன் (வேக வைத்தது)
எலுமிச்சைப் பழம் – ஒன்று
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
வறுத்த வேர்க்கடலைப் பொடி – ஒரு டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
கடுகு – உளுத்தம்பருப்பு – 4 டீஸ்பூன்
வேகவைத்த, பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு – கால் கப்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
அவல் மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு ஊறவிடவும். பிறகு, தண்ணீரை ஒட்டப் பிழிய வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பைத் தாளித்து, உருளைக்கிழங்கு, பச்சைமிளகாய், மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கிளற வேண்டும். பின்னர், பச்சைப்பட்டாணி, அவல் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை கிளறவும். கடைசியாக, எலுமிச்சைச் சாறு பிழிந்து, வேர்க்கடலைப் பொடி தூவிப் பரிமாறலாம்.