கிச்சன் கீர்த்தனா: கிரேப் ஸ்குவாஷ்!

Published On:

| By Kavi

வெயில் காலம் ஆரம்பித்து விட்டது. வெயிலால் நம் உடம்பில் உருவாகும் உஷ்ணத்தைக் குறைக்க மட்டுமல்ல, உடலின் எனர்ஜிக்கும் உதவும் வகையிலான ஜூஸ் வகைகளை அவ்வப்போது அருந்தலாம். அதற்கு இந்த கிரேப் ஸ்குவாஷ் உதவும். ஸ்குவாஷ் வகைகளைப் பொறுத்தவரை, அவை சில மாதங்கள் ஆனாலும் கெடாது. தேவைப்படும்போது சிறிது தண்ணீருடன் கலந்து அருந்தினால் அருமையான ஜூஸ் ரெடி.

என்ன தேவை?

கருநீல நிற திராட்சைச்சாறு – ஒரு கப்
சர்க்கரை – 2 கப்
தண்ணீர் – ஒரு கப்
சிட்ரிக் ஆசிட் – ஒரு டீஸ்பூன்
கிரேப் எசன்ஸ் – ஒரு டீஸ்பூன்

திராட்சைச் சாறு எப்படி எடுப்பது?

திராட்சையை காம்பு நீக்கி தண்ணீரில் சுத்தம் செய்யவும். அவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்து மத்தால் மசிக்கவும். மிக்ஸியில் அரைக்கக் கூடாது. பிறகு அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் திராட்சையை இறக்கி ஆறவிட்டு கொட்டைகளை நீக்கவும். ஜூஸ் எக்ஸ்ட்ராக்டர் இருந்தால் சுலபமாக கொட்டையை எடுக்கலாம். பிறகு மிக்ஸியில் அரைத்து வடிகட்டி சாறு எடுக்கவும். கொட்டையோடு அரைத்தால் அதன் சுவை மாறும்.

ஸ்குவாஷ் செய்வது எப்படி?

ஒரு கப் தண்ணீரில் 2 கப் சர்க்கரையைச் சேர்த்து அடுப்பில் வைக்கவும். சர்க்கரை முழுவதுமாக கரைந்ததும் சிட்ரிக் ஆசிட் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். அதனுடன் பிழிந்து வைத்த திராட்சைச்சாறு சேர்க்கவும். கலவையை ஆறவிட்டு, ஆறியதும் கிரேப் எசன்ஸ் சேர்க்கவும். வடிகட்டி பாட்டிலில் நிரப்பவும்.

ஜூஸ் கலக்குவது எப்படி?

கால் பங்கு ஸ்குவாஷ் முக்கால் பங்கு தண்ணீர் சேர்த்துக் கலந்து ஐஸ் போட்டுக் குடிக்கலாம்.

குறிப்பு:
மூன்று மாதங்களுக்கு மேல் ஸ்குவாஷ் வைத்திருக்க, சோடியம் பென்ஸோவேட் என்ற பிரிசர்வேட்டிவ் ஒரு லிட்டருக்கு ஒரு டீஸ்பூன் என்ற அளவில் சேர்த்து வைத்துக் கொள்ளவும். கால் கப் ஸ்குவாஷ் எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் பிரிசர்வேட்டிவ் சேர்த்துக் கலந்து மீதி உள்ள ஜூஸில் சேர்த்து கலக்கவும்.

இனிப்பு உணவுகளை அறவே தவிர்ப்பது நல்லதா?

பஜ்ஜி மிளகாய் குருமா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel