நாட்டின் 78-ஆவது சுதந்திர தினமான இன்று (ஆகஸ்ட் 15) சென்னை தலைமைச் செயலகக் கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியினை ஏற்றினார்.
அதனைத்தொடர்ந்து தனது சுதந்திர தின உரையில், “வரும் தைப்பொங்கல் முதல் ஏழை மக்களுக்காக 1000 ‘முதல்வர் மருந்தகங்கள்’ அமைக்கப்படும்” என்ற முக்கிய திட்டத்தினை அறிவித்தார்.
அன்றாட வாழ்க்கையில் மருந்து மாத்திரை வாங்குவதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்க வேண்டிய அளவுக்கு தனியார் மருந்தகங்களில் மருந்து விலை உள்ளது.
இந்த நிலையில் முதல்வர் மருந்தகம் திட்டம் நடுத்தர, ஏழை குடும்பத்திற்கு வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது.
அத்திட்டம் குறித்தும், அத்திட்டத்தினால் தொழில்முனைவோருக்கு கிடைத்திருக்கக்கூடிய வாய்ப்புகள் குறித்தும் இந்த செய்தியில் காண்போம்.
பொதுப்பெயர் வகை (ஜெனரிக்) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் கிடைக்கச் செய்யும் வகையில், ‘முதல்வர் மருந்தகம்’ என்ற புதிய திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளது.
பொங்கல் திருநாள் முதல் செயல்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டத்தின்கீழ், முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும்.
இந்தத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்திட, மருந்தாளுநர்களுக்கும், கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேவையான கடனுதவியோடு மூன்று இலட்சம் ரூபாய் மானிய உதவியாக அரசால் வழங்கப்படும்.
இது தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கிற ஒரு முக்கியமான திட்டம் மட்டுமல்லாமல், D.Pharm மற்றும் B.Pharm படிப்பு முடித்தவர்களுக்கு சொந்த தொழில் தொடங்கிட வாய்ப்பு அளிக்கும் அற்புதமான திட்டமாகும்.
இந்த மருந்தகங்களுக்குத் தேவையான தரமான மருந்துகள், TNMSC மூலம் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கொள்முதல் செய்யப்படும்.
குறிப்பாக, பொதுப்பெயர் வகை (ஜெனரிக்) மருந்துகள் மிக குறைவான விலையில் விற்பனை செய்யப்படும். இந்தத் திட்டத்தின்கீழ், தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களில் முதற்கட்டமாக 1000 மருந்தகங்கள் தொடங்கப்படவுள்ளது.
முந்தைய காலங்களில் கூட்டுறவு மருந்தகங்கள் கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்பட்டு வந்த நிலையில், 2016 ஆம் ஆண்டு முதல் அன்றைக்கு ஆட்சியில் இருந்த அதிமுக ஆட்சியில் புதிதாகத் தொடங்கப்பட்ட கூட்டுறவு மருந்தகங்களுக்கு அம்மா மருந்தகம் எனப் பெயரிடப்பட்டது.
இம்மருந்தகங்கள் கூட்டுறவு மருந்தகங்களை போன்றே சங்கங்களால் நடத்தப்பட்டன; தொழில் முனைவோர் ஈடுபடுத்தப்படவில்லை.
கூட்டுறவு மருந்தகம் மற்றும் அம்மா மருந்தகம் 380 எண்ணிக்கையில் மட்டுமே மாநிலம் முழுவதும் செயல்படுகின்றன. அம்மா மருந்தகங்களில் குறிப்பிட்ட வகை மருந்துகள் (Branded medicines) மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பின்வரிசையில் ராகுல்… மத்திய அரசின் இழிவான செயல் : செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு!
‘GOAT’ டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!