‘2030-ம் ஆண்டுக்குள் தொற்றா நோய்களாகிய இதய பாதிப்பு, புற்றுநோய், நீரிழிவு போன்ற பாதிப்புகள் அதிகரிக்கும்’ என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வரும் நிலையில், இலவச புற்றுநோய் பரிசோதனைத் திட்டம் தமிழகத்தின் நான்கு மாவட்டங்களில் தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம், ‘தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் புற்றுநோய் பரிசோதனை செய்துகொள்வதற்கான திட்டம், பொது சுகாதார துறையால் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்தத் திட்டத்தின் ஆரம்ப கட்டமாக ராணிப்பேட்டை, ஈரோடு, கன்னியாகுமரி, திருப்பத்தூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் இலவச பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். இது குறித்த அறிவிப்பு கடிதத்தை சுகாதார பணியாளர்கள் வீடு வீடாக வழங்குவார்கள்.
ஆரம்ப சுகாதார நிலையம், மாவட்டத்தின் தலைமை மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மக்கள் இலவசமாகப் புற்றுநோய்க்கான பரிசோதனைகளைச் செய்து கொள்ளலாம். புற்றுநோயை, ஆரம்பத்திலேயே கண்டறிவதால் உயிரிழப்பைத் தடுக்க முடியும். வாய் புற்றுநோயால் ஆண், பெண் என இரு பாலரும் பாதிக்கப்படுகிறார்கள்.
மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் பரிசோதனைகளை 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மேற்கொள்வது அவசியம். பரிசோதனை மேற்கொண்டவர்கள் மூன்றாண்டுக்கு ஒரு முறை மறு பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா : மட்டன் சேமியா பிரியாணி
தேர்தலுக்கு முன் இரட்டை இலை சின்னத்தை முடக்க வாய்ப்பு : வைத்திலிங்கம்