“தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு முடித்து நடப்பு கல்வியாண்டில் உயர்கல்வியில் சேராத மாணவர்களின் விவரங்களைச் சேகரிக்க வேண்டும்” என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை இன்று (செப்டம்பர் 23) சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
கொரோனா பரவல் காரணமாகக் கடந்த இரண்டு (2020-2021) ஆண்டுகளாகக் கல்வி நிலையங்கள் சரியாகச் செயல்படவில்லை.
இந்த ஆண்டு (2022) வழக்கம்போல் கல்வி நிலையங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன. மாணவர்கள் அனைவரும் வழக்கம்போல் பள்ளி கல்லூரிகளுக்குச் சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் பலர் உயர்கல்வி தொடராமல் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பள்ளிக்கல்வித்துறை திட்ட இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அந்த சுற்றறிக்கையில், “தமிழகத்தில் 2021-22ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் நடப்பு கல்வியாண்டில் (2022-2023) உயர் கல்வியில் சேர்ந்துள்ளனரா என்பதைக் கண்டறிய வேண்டும்.
12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் உயர்கல்வியில் சேரவில்லையெனில் சம்பந்தப்பட்ட மாணவர்களைத் தொடர்புகொண்டு எந்த காரணத்திற்காக உயர்கல்வியில் சேர இயலவில்லை எனக் கண்டறிய வேண்டும்.
அவர்கள் உயர்கல்வியில் சேர்ந்திடத் தேவையான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கிட வேண்டும். மேலும் தற்போதுவரை 79,762 மாணவர்களின் விவரங்களில் 8,588 மாணவர்கள் உயர்கல்வியில் இதுவரை சேரவில்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது.
இவர்களுக்கு மாநில திட்ட இயக்ககத்திலிருந்து ஆலோசனைகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன் மாணவர்களின் மதிப்பெண், தொலைபேசி எண், இஎம்ஐஎஸ்(EMIS) எண், கல்வி மாவட்டம் உள்ளிட்ட விவரங்களைச் சம்பந்தப்பட்ட பள்ளிகளிலிருந்து சேகரித்துச் சமர்ப்பிக்க வேண்டும்” எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “இந்த பணிகளை முன்னுரிமை அடிப்படையில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் மேற்கொண்டு முடிக்க வேண்டும்” எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மோனிஷா