செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அரசு பேருந்து விபத்தில் சிக்கியதில் 6 பேர் உயிரிழந்தனர்.
சென்னையிலிருந்து சிதம்பரம் நோக்கி அரசு பேருந்து ஒன்று இன்று காலை சென்றுகொண்டிருந்தது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்துள்ள அச்சிறுபாக்கம் தொழுப்பேடு பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது, முன்னால் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதியிருக்கிறது.
வேகமாக வந்த அரசு பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கண்டெய்னர் லாரி மீது மோதியதில் பேருந்தின் ஒரு பக்கம் முழுவதும் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தால் பேருந்திலிருந்த பயணிகள் காப்பற்றக் கோரி சத்தமிட்டனர்.
இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்களும், போலீசாரும் வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்தில் சிக்கி 2 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தது தெரியவந்தது. படுகாயமடைந்தவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் போலீசார் அனுப்பினர்.
மருத்துவமனையில் 10 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து அச்சிறுபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவர்களின் விவரங்களைச் சேகரித்து அவர்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். காலையிலேயே நடந்த விபத்தால் 6 பேர் உயிரிழந்திருப்பது தமிழக மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து காரணமாகச் சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
-பிரியா