அரசு மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகளை கோயம்பேட்டில் இருந்து இயக்குமாறு உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை மாநகருக்குள் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதை தடுக்கும் வகையில், வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் புதிதாக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. தென் மாநிலங்களுக்கு சென்று வரக் கூடிய பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. இதன்காரணமாக சென்னையில் வசிக்கும் வெளியூர் பயணிகள் கிளாம்பாக்கம் செல்ல சிரமப்படுகின்றனர்.
இந்நிலையில் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கத்துக்கு மெட்ரோ ரயில் சேவை கொண்டு வரும் வரை கோயம்பேட்டில் இருந்து பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “விமான நிலையம் – கிளாம்பாக்கம், வேளச்சேரி – தாம்பரம் மெட்ரோ ரயில் சேவை துவங்கும் வரையிலும்,
கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு செல்ல வான்வெளி நடை பாதை அமைக்கும் வரையிலும்,
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பெருங்களத்தூர் மார்க்கம் செல்லும் வாகனங்களுக்கு U வளைவு பாலம் அமைக்கும் வரையிலும்,
அரசு மற்றும் ஆம்னி பேருந்துகளை கோயம்பேட்டில் இருந்து இயக்க அனுமதிக்க வேண்டும். இலகு மற்றும் கனரக வாகனங்களை அவுட்டர் ரிங் ரோடு வழியாக இயக்க அனுமதிக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்
இந்த மனு இன்று (ஜூலை 9) பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “கிளாம்பாக்கத்தில் இருந்துதான் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்று பிறப்பிக்கபட்ட உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தனி நீதிபதி முன் உள்ளது”என்று தெரிவித்தார்.
இதை கேட்ட நீதிபதிகள், “தனி நீதிபதி முன் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் இந்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. இம்மனுவை வாபஸ் பெற்று தனி நீதிபதி முன் வழக்கை நடத்தும்படி அறிவுறுத்தி, வழக்கை ஜூலை 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
DGD vs SLST: அஸ்வினுக்கு அதிர்ச்சி அளித்த சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி!
ஆம்ஸ்ட்ராங் படுகொலை : தேசிய பட்டியலினத்தோர் ஆணையம் நோட்டீஸ்!