காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் உள்ள சேக்கிழார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வெளிமாவட்டங்களில் இருந்து வந்து படிக்கக்கூடிய மாணவர்கள் தங்கி படிப்பதற்காக பள்ளி வளாகத்திலேயே அரசு ஆதிதிராவிடர் நல விடுதி செயல்பட்டு வருகிறது.
தற்போது இந்த விடுதியில் ஒரு மாணவர் கூட தங்கி படிக்கவில்லை என்பது அதிர்ச்சியாக உள்ளது. குறிப்பாக இந்த விடுதியை சுற்றிலும் மரம், செடி கொடிகள் அதிக அளவில் வளர்ந்து காடு போல் உள்ளது.
கொசு தொல்லை அதிக அளவில் உள்ள நிலையில் பாம்பு உள்ளிட்டவை அதிக அளவில் வருவதாகவும் இரவு நேரத்தில் இங்கு காவலாளிகள் இல்லாததால் இங்கு தங்கி படிக்க மாணவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
கொரோனா காலத்துக்கு முன்பு இந்த விடுதியில் மாணவர்கள் தங்கி படித்ததாகவும் அதன் பிறகு விடுதியில் தங்கி படிக்க மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது.
தற்போது இந்த விடுதியில் தினமும் 40 மாணவர்களுக்கு மதிய உணவு மட்டும் தயாரித்து தருவதாகவும் விடுதியில் மாணவர்கள் தங்காததால் மற்ற இரு வேளைகளில் உணவுகள் செய்து தரப்படவில்லை என்று கூறப்படுகிறது.
தற்போது இந்தப் பள்ளி வளாகத்திலேயே ஸ்ரீபெரும்புதூர் அரசு அறிவியல் மற்றும் கலை கல்லூரி செயல்பட்டு வரும் நிலையில் வெளியூர்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் இந்த கல்லூரிக்கு வருகின்றனர்.
எனவே பள்ளி மாணவர்கள் தங்கி பயிலாத இந்த விடுதியை கல்லூரி மாணவர்கள் தங்கி படிப்பதற்கு ஏற்ற வகையில் மாற்றி தர வேண்டும் என்று மாணவர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாதுகாப்பாற்ற சூழலில் உள்ள இந்த வளாகத்தை சுத்தம் செய்து மாணவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கவும் இரவு நேரங்களில் காவலாளியைப் பணியில் அமர்த்திடவும்,
மாணவர்கள் தங்கி படிப்பதற்கு ஏதுவான வகையில் செயல்படுத்த வேண்டும் என்று பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருமழிசை பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் அங்குள்ள விடுதியை ஆய்வு செய்தபோது அதில் மாணவர்கள் ஒருவர்கூட இல்லாமல் இருந்த நிலையில் தற்போது குன்றத்தூர் பகுதியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மாணவர்கள் நல விடுதியிலும் அதே நிலை உள்ளது குறிப்பிடத்தக்கது.
ராஜ்
‘எம்மதமும் சமமே’: உதயநிதி சனாதன பேச்சு… காங்கிரஸ் அதிகாரபூர்வ கருத்து!
யாரையும் புண்படுத்தக் கூடாது : உதயநிதி பேச்சு குறித்து மம்தா