திருக்குறள் ஆன்மீக நூலா?: ஆளுநருக்கு வலுக்கும் கண்டனம்!

தமிழகம்

டெல்லி தமிழ் கல்வி கழகம் சார்பில் சீனியர் செகண்டரி பள்ளியில் நடந்த விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ரவி நேற்று (ஆகஸ்ட் 25 ) திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார்.

அந்த நிகழ்வில் பேசிய அவர், “திருக்குறளை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் ஜி.யு.போப். அவருடைய மொழிபெயர்ப்பே இன்றளவிலும் கொண்டாடப்படுகிறது.

திருக்குறளில் உள்ள ஆதி பகவன் என்ற வார்த்தை ரிக் வேதத்தில் இருந்து பெறப்பட்டது. அதுதான்  இந்திய ஆன்மிகத்தின் மையப்புள்ளி.

அதில் தொடர்ச்சியாக வரும் 10 குறள்களிலும் அடிப்படையாக இருப்பவை ‘அந்த ஆதிபகவன் மீதான பக்தியை’ பற்றியது

ஆனால் அதன் ஆன்மாவை ஜி.யு போப் வேண்டுமென்றே தனது மொழிபெயர்ப்பில் சிதைத்துள்ளார்” என பேசியிருந்தார்.

ஆளுநர் ரவியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்  பொது மக்கள், கல்வியாளர்கள், அரசியல்வாதிகள் என பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவொன்றை இட்டுள்ள அமைச்சர் மனோ தங்கராஜ், “மதத்திற்கும், சாதிக்கும் முற்றிலும் எதிரானதும், உண்மையானதுமான ஆன்மீகத்தை பற்றி திருக்குறள் விவரிக்கிறது.

ஜி.யு. போப் தமிழ் இலக்கியத்திற்கு அளித்திருக்கும் பங்களிப்பு அளப்பரியது. ஆளுநர் ரவியின் பேச்சு, தான் விரும்பும் மத உணர்வை திருக்குறள் பிரதிபலிக்கவில்லை என்ற விரக்தியின் வெளிப்பாடே ஆகும்.

வருணாசிரமதாரர்களின் இத்தகைய கருத்துக்கள் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்கும், தமிழ் பண்பாட்டிற்கும் எதிராக விடுக்கப்பட்டிருக்கும் சவால்” என தெரிவித்துள்ளார்.

எம்.பி சு.வெங்கடேசன், ஜோதிமணி உட்பட பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், “”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று சனாதனத்தை தோலுரித்த வள்ளுவர் பற்றியும், 40 ஆண்டுகள் தமிழ் தொண்டாற்றிய ஜீ யூ போப் பற்றியும் பாடம் எடுக்கும் ஆளுநரே,

கடவுள் வாழ்த்தே இல்லாமல் இந்திய அரசியல் சாசனம் ஏன் உருவாக்கப்பட்டது என்பதை படித்துப்பாருங்கள்.

ஆன்மீகத்தின் பெயரால் வெறுப்பை விதைப்பவர்களை வள்ளுவர் மனிதனாகவே மதிப்பதில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள். உளறல்களை நிறுத்துங்கள்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

கரூர் காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி, “தமிழக ஆளுநர் திருக்குறளை வைத்து மதவெறியை தூண்டலாம் என்று நினைப்பது தமிழகத்தைப் பற்றியும், உலகப் பொதுமறையான திருக்குறளைப் பற்றியும் அவருக்கு எந்தப் புரிதலும் இல்லை என்பதையே காட்டுகிறது.

இது அன்பின் நிலம், பகுத்தறிவின் நிலம்.ஒற்றுமையின் நிலம். பிரிவினைக்கு இங்கே வேலையில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

க.சீனிவாசன்

திருக்குறளின் ஆன்மாவை பறித்துவிட்டார் ஜி.யு.போப்: ஆளுநர் ரவி குற்றச்சாட்டு!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *